வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா இன்று !

Thursday, August 29th, 2019

வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இடம்பெற்று வருகின்றது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்த நிலையில் 24ஆம் நாளான இன்று தேர் திருவிழா இடம்பெறுகின்றது.

சித்திரவேலைப்பாடுகளுடன் கூடிய திருத்தேரில் வலம் வந்து காட்சி தரும் வேலனை காண பெருந்திரளான மக்கள் அங்கு திரண்டுள்ளனர். காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் காலை 7 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

தேர் திருவிழாவை காண உள்நாட்டவர்கள், வெளிநாட்டவர்கள் உட்பட பலரும் நல்லூரை நோக்கி படையெடுத்துள்ளனர். அத்துடன் பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றி வருகின்றனர்.

அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டு வருகின்றனர். இதேவேளை, நாளைய தினம் காலை 7 மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதுடன், மாலை 5 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறவுள்ளமையும் குறிபிடத்தக்கது.

Related posts: