உயர்தரப் பரீட்சையின் போது அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, February 2nd, 2022

க.பொ.த. உயர்தரப் பரீட்சை காலப் பகுதியில் அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் குறித்த பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 07 ஆம் திகதிமுதல் மார்ச் 07ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

முன்பதாக

உயர்தரப் பரீட்சையின் போது ஆரம்பப் பிரிவு ஆரம்ப பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட மாட்டாது எனவும், பரீட்சை சூழலை பேணுவதற்கு இடையூறான பாடசாலையாக இருந்தால் சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறான பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளுக்கு விடுமுறை வழங்குவதற்கும், குறித்த பாடசாலைகளுக்குரிய பணியிடங்களை பரிந்துரைப்பதற்கும், கற்றல் முறைகளை மேற்கொள்வதற்கும் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை பரீட்சை கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை பணிக்கமர்த்துமாறு அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள், வலய மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

இந்நிலையில் – கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதிகளில் அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியிரந்தது.

அத்துடன் அண்மைய நாள்களில் கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கோவிட் தொற்று கூடுதலாக பரவி வருவதாக சுட்டிக்காட்டியிருந்ததுடன் இவ்வாறான ஒரு பின்னணியில் ஆரம்ப பிரிவு மாணவர்களை அழைத்து கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வது நோய் கட்டுப்பாட்டை பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: