பலமான காற்றுடன் கடற் கொந்தளிப்பும் காணப்படும் – வானிலை அவதான நிலையம்!

Sunday, September 8th, 2019

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலைஅவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்தில் இருந்து காங்கேசந்துறை மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Related posts: