ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Sunday, September 15th, 2019


ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவித்தல் இந்த மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் சட்டத்திற்கு அமைய, கடந்த 10 ஆம் திகதி முதல் ஜனாதிபதித் தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ளதாக அதன் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், அந்த அதிகாரத்தை எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னரே தேர்தல்கள் ஆணைக்குழு பிரயோக ரீதியாக பயன்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தல் சட்டத்திற்கு அமைய, ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டு, 14 நாட்களுக்கு குறையாத மற்றும் 21 நாட்களைவிட அதிகரிக்காத தினத்தில் வேட்புமனு கோரப்படல் வேண்டும்.

வேட்புமனு கையேற்கப்பட்டு நான்கு வாரம் முதல் 6 வாரங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் உள்ள தினம் ஒன்றில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் அடுத்த மாதம் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், அதற்கு தாக்கம் ஏற்படாத வகையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில், எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் 30 திகதிக்கு இடையிலான காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கு பெரும்பாலும் வாய்ப்புள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறிருப்பினும், ஜனாதிபதித் தேர்தல் சனிக்கிழமை தினமொன்றில் நடத்தப்பட வேண்டும் என்ற விதிமுறை இல்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் 17ஆம் திகதி அரசியல் கட்சிகளின் செயலாளர்களை சந்திக்க உள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படலாம் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் 2018 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலின் அடிப்படையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: