ஈ.பி.டி.பி உறுப்பினர் மீது தாக்குதல்: வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் அடாவடி – பொலிஸ் நிலையத்தில் 20 உறுப்பினர்கள்!

Thursday, October 24th, 2019

பொலிஸ் அதிகாரியின் முன்னிலையில் வலிகாமம் பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவரை தாக்கியதில் வலி.வடக்கு பிரதேச சபை அமர்வு பெரும் களோபராகியுள்ளது.

இன்றையதினம் வலி.வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நடைபெற்றது. இதன்போது தவிசாளரது தன்னிச்சையான போக்குகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய எதிர்கட்சி  உறுப்பினர்கள் உள்ளிட்ட 20 உறுப்பினர்கள்  போராட்டம் நடத்தினர்

இதனை தடுப்பதற்கான எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது தவிசாளர் சுகிர்தன் அடாவடியில் ஈடுப்ட்டார் இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் அச்சம்பவங்களை ஒளிப்பதிவு செய்துள்ளார். குறித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரை தவிசாளர் சுகிர்தன் கன்னத்தில் அறைந்து தொலைபேசியை பறித்துள்ளார்.

இதனையடுத்து சபையில் பெரும் களோபரம் ஏற்பட்டது. இந்நிலையில் பொலிசாரை சபைக்குள் தவிசாளர் அழைத்து, பலவந்தமாக உறுப்பினர்களை அகற்ற முயன்றுள்ளார். பொலிசாரின் வருகையை அடுத்து சபையில் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன்போது பொலிசார்  ஒருவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவரை நோக்கி துப்பாக்கியை நீட்டி சுட முயன்றுள்ளார்.

மாவை சேனாதிராசாவின் உதவியாளரான சுகிர்தன் தவிசாளராக பதவிவகித்து வருவதுடன் வலிவடக்கு பிரதேச சபையில் நீண்டகாலமாக குழப்பம் விழைவித்தும் வருகின்றார். சபை வாகனத்தை தனது மனைவி பிள்ளைகளை மட்டுமல்லாது வெறு சில பெண்களையும் ஏற்றி தனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்துவது, தன்னிச்சையான தீர்மானங்கள் எடுப்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை உறுப்பினர்கள் நீண்டகாலமாக சுமத்தி வருகிறார்கள். அத்துடன் சபையில் எடுக்கப்படும் தீர்மானங்களை தவிசாளர் கணக்கிலெடுக்காமல் செயற்படுவதாகவும் குற்றம்சுமத்தப்பட்டு வந்தது.

இந்தநிலையில், இன்றைய அமர்விலும், கடந்த சபை அமர்வுகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென உறுப்பினர்கள் வலியுறுத்தினர். டயலொக் நிறுவனத்தின் கோபுர பணியை நிறுத்துவது, கீரிமலையில் குப்பை சுத்திகரிப்புமிடம் தொடர்பாக பிரதேசமக்களிற்கு விளக்கமளிப்பது, உறுப்பினர்களிற்கு தெரியாமல் தனது ஆதரவாளர்களிற்கு மின்விளக்கு கொடுப்பது உள்ளிட்ட விவகாரங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்தும்படி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாதென தவிசாளர் விடாப்பிடியாக நின்றார்.

இதனால் குழப்பம் ஏற்பட, உறுப்பினர்கள் சிலர் சபைக்கு நடுவில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் அரசு கட்சியின் சில உறுப்பினர்கள், ஐ.தே.க, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, சுதந்திரக்கட்சி, ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சபை சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சபை அமர்வு ஆரம்பித்தபோது, மீளவும் போராட்டம் இடம்பெற்றது.

இதையடுத்து பொலிசாரின் உதவியை நாடிய தவிசாளர், போராட்டம் நடத்தும் உறுப்பினர்களை அங்கிருந்து அகற்ற முயன்றனர். இதன்போது சுகிர்தனின் நெருக்கமான சீருடை அணிந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும், சிவில் உடையில் இரண்டு உத்தியோகத்தர்களும் அங்கு சென்றனர்.

இதையடுத்து, பிரதேச சபை மண்டபத்திற்குள் பொலிசார் நுழைய முற்பட, உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பொலிசாருக்கும், உறுப்பினர்களிற்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை கையடக்கத் தொலைபேசியில் படம்பிடித்த ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியை தவிசாளர் பலவந்தமாக பறித்துக் கொண்டு தனது அறைக்கு சென்றுள்ளார்.

தவிசாளரின் அறைக்கு சென்ற உறுப்பினர்கள் கையடக்கத் தொலைபேசியை வழங்கும்படி தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஐ.தே.கவின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரை சுட்டுவிடுவதாக துப்பாக்கியை நீட்டியதாக உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: