அமைச்சரவை குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, October 2nd, 2019


அரச துறைகளில் தற்போது முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை குழு சமர்ப்பித்த பரிந்துரைகளுக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் அமைச்சரவை இணை குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. அந்த குழு தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

அதன்படி, இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளிட்ட நிறைவேற்று கொடுப்பனவு கிடைக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் சேவை காலத்தினை அடிப்படையாக கொண்டு செலுத்தப்படும் 3000 ரூபாய் தொடக்கம் 15,000 ரூபாய் வரையான நிறைவேற்று கொடுப்பனவு, சேவை காலத்தினை கருத்திற் கொள்ளாது 15000 ஆயிரம் ரூபாவாக திருத்தப்பட்டு பொதுவாக செலுத்தப்பட வேண்டும் என அந்த குழுவால் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அதேபோல், ஆசிரியர் சேவை மற்றும் ரயில் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்காக மற்றும் பொருத்தமான சம்பள கட்டமைப்பை தயாரிப்பதற்காக அமைச்சரவை குழு சமர்ப்பித்த பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை, நிர்வாக சேவை அதிகாரிகள் முன்னெடுத்திருந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. ரயில் பணிபகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் நிலையில், இன்று காலை வெளிமாகாணங்களில் இருந்து கொழும்பு நோக்கி சில அலுவலக ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: