வாகன பதிவின் போது ஊழல் மோசடி – 30 கோடி ரூபாவுக்கு அதிகமான வரி வருமான இழப்பு – மோட்டார் போக்குவரத்து துறையின் 2022 ஆண்டறிக்கையின் தணிக்கை அறிக்கையில் தகவல்!

Tuesday, September 12th, 2023

மோட்டார் போக்குவரத்து துறையின் 2022 ஆண்டறிக்கையில் இடம்பெற்றுள்ள தணிக்கை அறிக்கையின்படி, வாகன பதிவின் போது நடந்த பல்வேறு ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகளால் 30 கோடி ரூபாவுக்கு அதிகமான வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, 2019 ஆம் ஆண்டு Mitsubishi Pajero ரக காரின் தரவுகளை உள்ளீடு செய்து Ceygra ரக காரை பதிவு செய்ததன் மூலம் அபராதம் உட்பட 757,500 ரூபா சொகுசு வரி வருமானமும் 3 கோடி 52 இலட்சம் ரூபா உற்பத்தி வரி வருமானமும் இழக்கப்பட்டுள்ளதுதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மினி கூப்பர் ரக காரின் தரவுகளை பதிவு செய்து மற்றுமொரு Ceygra ரக காருக்கு பதிவு சான்றிதழ் வழங்கியதன் காரணமாக 55 இலட்சத்து 13 ஆயிரம் ரூபா உற்பத்தி வரி வருமானம் மற்றும் 44,050 ரூபா பதிவு கட்டணமும் இழக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட Ceygra ரக கார், மீண்டும் டொயோட்டோ டீசல் காரில் தரவை உள்ளிட்டு பதிவு சான்றிதழ் வழங்கியதால் உற்பத்தி வரி வருமானத்தில் நான்கு கோடி 99 இலட்சத்து 20,000 ரூபாவை இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் முன்பதிவு செய்யப்பட சேஸ் இலக்கங்கள் மற்றும் இயந்திர இலக்கங்களை மாற்றியமைத்து 91 மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட அல்லது இலங்கையில் பொருத்தப்பட்ட வாகனங்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்த மோசடியால், இலங்கை சுங்கத்தால் பெறக்கூடிய 12 கோடிக்கும் அதிகளவான வருமானம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கார்களை பொறுத்துகிறோம் எனும் போர்வையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 27 வாகனங்களின் பதிவு குறித்த தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெட்ரோல் காரை டீசல் காராக மாற்றும் போது, வாகன பதிவு இலக்கத்தை கணினியில் இருந்து நீக்க வேண்டுமென்ற போதும், 130 மாற்றப்பட்ட வாகனங்களின் பதிவு இலக்கங்கள் நீக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீண்டகாலமாக வருமான உரிமம் வழங்கப்பட்ட 99 பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் சேஸ் இலக்கம் மற்றும் இயந்திர இலக்கங்களை மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் சிலர் மாற்றி மோசடியாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் சேஸ் இலக்கம் மற்றும் இயந்திர இலக்கங்களை உள்ளிட்டு பழைய தரவுகளை நீக்கியுள்ளதாக தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து துறையின் கணினி தரவு அமைப்பில் தரவை உள்ளிட அங்கீகரிக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கணினி கடவுச்சொற்கள் வழங்கப்படுகின்றன.

இருப்பினும், குறித்த நபர்கள் வேறு அலுவலகங்களுக்கு மாற்றம் பெற்றதன் பின்னர் அல்லது ஒய்வு பெற்றதன் பின்னர் அந்த கடவுச்சொல் செயலில் இருப்பதால் அவர்கள் தரவு அமைப்பில் நுழைந்து மோசடி செயல்களில் ஈடுபடும் திறனைக் கொண்டுள்ளதாக தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது.

சில அதிகாரிகள் தரவு அமைப்பில் இருந்து பல தரவுகளை நீக்கியுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்து துறையின் 2022 ஆண்டறிக்கையில் இடம்பெற்றுள்ள தணிக்கை அறிக்கை குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: