வேண்டியளவு குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம் – ஆனால் அவை நிரூபிக்கப்பட வேண்டும் – அவ்வாறன்றி அரசியலமைப்புக்கு புறம்பாக நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச்செல்ல முடியாது – பிரதமர் மஹிந்த சுட்டிக்காட்டு!

Thursday, April 28th, 2022

என்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் கூறவில்லை. அவ்வாறு கூறவும் மாட்டார் என்றும் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் பிரதேச சபைத் தவிசாளர்கள், நகரசபைத் தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு வெளிநாட்டு உதவிகளைப் பெற்றேனும் தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இந்த சந்திப்பின்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியிலிருந்து விலகக் கூடாது என உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர்.

இந்த  சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இந்த நெருக்கடியிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தற்போது எமக்கு உள்ளது. எனவே அதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

அனைத்து வகையிலும் வீழ்ச்சியடைந்த ஒரு நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம். அப்போது பொருளாதாரத்தில் மட்டுமல்ல தேசிய பாதுகாப்பிலும் மக்களுக்கு நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. பயங்கரவாதிகள் இல்லாத நாட்டை உருவாக்கித் தருமாறு பெரும்பாலான மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இன்று நாம் அந்த கோரிக்கையை சரியாக நிறைவேற்றிவிட்டோம் என்று நினைக்கிறேன்.  தரிசு நிலமாக காணப்பட்ட நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் பெரும் முயற்சி செய்துள்ளோம்.

கொவிட் தொற்றிலிருந்து ஓர் அரசாங்கமாக எங்களால் முழு நாட்டையும் பாதுகாக்க முடிந்தது. மக்களை அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு கொண்டு வருவதற்கான சவாலை நாங்கள் வெற்றி கொண்டோம்.

இன்று அவர்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையானோரே காலிமுகத்திடல் மைதானத்திற்கு வந்து எம்மை வெளியேறுமாறு கூறுகின்றனர். நாம் அனைவரும் மக்களின் ஆணையாலேயே இந்த இடங்களுக்கு வந்துள்ளோம்.

அந்த மரியாதை இன்றும் மக்களுக்கு உள்ளது. மக்கள் இறையாண்மை என்பது நாட்டின் அரசியலமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. நெருக்கடியான நிலையில் நாட்டை விட்டு வெளியேற மக்கள் எம்மை நியமிக்கவில்லை.

வேண்டியளவு குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம். ஆனால் அவை நிரூபிக்கப்பட வேண்டும். அவ்வாறன்றி அரசியலமைப்புக்கு புறம்பாக இந்த நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச்செல்ல முடியாது.

நாம் வரலாற்றின் சவால்களில் இருந்து தப்பித்து ஓடியவர்கள் அல்ல. தப்பித்து ஓடவும் மாட்டோம். எங்களிடம் குறுகிய கால மற்றும் நீண்ட கால பொருளாதார முகாமைத்துவ கொள்கை உள்ளது. அதற்கமைய இந்த சவாலை சமாளிக்க முடியும் என்று நம்புகிறோம்.

மத்திய வங்கி உட்பட பொது நிதி நிறுவனங்களுக்கு மக்களால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர்களை நியமிக்கமுடிந்தது. அண்மையில் சீனப் பிரதமருடன் தொலைபேசியில் உரையாடினேன்.

சீனாவின் ஆதரவை எமக்கு பெற்றுத் தருவதாக அவர் உறுதியளித்தார். மேலும் பல நாடுகள் எமக்கு உதவத் தொடங்கியுள்ளனர்.

நாங்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று இலங்கையின் நிலைமையை சுட்டிக்காட்டிய போது, தற்போது எமக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

எங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அவர்களின் சில கோரிக்கைகளுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும். அவற்றை பின்பற்றி நாம் முன்னேற வேண்டும்.

நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். வெளிநாட்டு உதவியை பெற்றேனும் நாட்டை கட்டியெழுப்ப தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். உங்கள் பலத்தால் அவர்கள் விரும்பியவாறு நாட்டைக் கட்டியெழுப்பவோ, நாட்டைக் கைப்பற்றவோ, எம்மை ஆட்டி படைக்கவோ எவரையும் நாம் அனுமதிக்க மாட்டோம் என்பதை நினைவூட்டுகிறேன்.

நீங்கள் எம் மீது கொண்ட நம்பிக்கை வைத்து பணியாற்றுவது குறித்து நாம் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஜனாதிபதி ஒருபோதும் என்னை செய்யுமாறு ஒருபோதும் கூறவில்லை என்பதை நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அவ்வாறு கூறமாட்டார் எனவும் உறுதியாக நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: