நாளை முதல் பாடசாலைகள் மீள ஆரம்பம் – முதலாம் தவணை நீடிப்பு – பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்து மற்றும் சிற்றூர்ந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஊடாக எரிபொருள் வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

Sunday, July 24th, 2022

எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து ஏற்பட்ட போக்குவரத்து பிரச்சினை காரணமாக கடந்த சில வாரங்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் செயற்பாடுகள் முன்னர் அறிவித்த வகையில், நாளை மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் 2022ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் மற்றும் மூன்றாம் தவனை கற்றல் செயற்பாடுகள் இடம்பெறும் காலப்பகுதி தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் முதலாம் தவனை பரீட்சை இடம்பெற மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழைமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை விடுத்து அறிவித்துள்ளது.

புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்து மற்றும் சிற்றூர்ந்து ஆகிய வாகனங்களுக்கு இன்று பிற்பகல் 3 முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஊடாக எரிபொருள் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி மற்றும் அது தொடர்பில் இனிவரும் காலங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.

கல்வி, மீன்பிடி, சுற்றுலா, விவசாய நடவடிக்கை மற்றும் பொது போக்குவரத்து சேவை சேவையில் ஈடுபடும் தனியார் மற்றும் அரச பேருந்துக்காக அவசியமான எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்தல் மற்றும் விரைவுபடுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நாளைமறுதினம்முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மீள ஆரம்பிக்கும்போது, மாணவர்களுக்கு அவசியமான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவது குறித்து கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார்.

இதையடுத்து, போக்குவரத்து அமைச்சருக்கு ஜனாதிபதியினால் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: