யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் – அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, July 4th, 2018

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மநாட்டில் காணி அபிவிருத்தி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த பருணாதிலக்க இதனை தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக செங்கல் மற்றும் சீமெந்தினாலான பாரம்பரிய நிரந்தர வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவையினால் முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை இணக்கப்பாட்டுக்குழு மற்றும் திட்டக்குழுவின் சிபார்சுக்கமைய வீடொன்று 1.25 மில்லியன் ரூபாவிற்கு வட்டியில்லாத கடனில் 25 ஆயிரம் வீடுகளை இந்த திட்டத்தில் முதலாவது கட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிர்மாணிப்பதற்கும் இதில் 15 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணி 2018ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 8 மாத காலத்தில் பூர்த்தி செய்வதற்கும் எஞ்சிய 10ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை 2019 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்வதற்கும் இந்த வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்காக ஐக்கிய நாடுகள் திட்டம் தொடர்பிலான அலுவலகம் யுஎன்ஓபிஎஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவள வீடமைப்பு வேலைத்திட்டத்தை பிரதானமாக கொண்ட நிறுவன குழுமத்துடன் உடன்படிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறினார்.
இதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.

Related posts: