வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள்; இவ்வருடம் 7 பில்லியன் டொலர் எதிர்பார்ப்பு – ஜனவரி மாதம் 500 மில். டொலர் வருமானம்!

Wednesday, February 15th, 2023

பயிற்சி பெற்றவர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக அனுப்பினால் இந்த வருடத்தில் 7 பில்லியன் அமெரிக்கன் டொலர்களை நாட்டுக்குப் பெற்றுக்கொள்ள முடியுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருட ஜனவரி மாதத்தில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள், நாட்டுக்கு அனுப்பியுள்ள அந்நிய செலாவணி நூற்றுக்கு 68.8 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் இதன் மூலம் கிடைத்துள்ள அந்நியச்செலாவணி 500 மில்லியன் அமெரிக்கன் டொலராகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்: இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரை வெளிநாட்டு வேலை வாய்ப்பில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர் அனுப்பப் போவதில்லை என எதிர்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

எனினும், கடந்த வருடத்தை விட அந்த வருமானம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். அதேவேளை பயிற்சி பெற்றவர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பினால் இந்த வருடத்தில் அவர்களிடமிருந்து அந்நியச் செலாவணியாக 7 பில்லியன் அமெரிக்கன் டொலர்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: