வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தை உருவாக்க ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று நியமனம் !

Friday, September 4th, 2020

இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தை உருவாக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சுபீட்சமான எதிர்காலம் என்ற திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான தேசிய அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஊடாக வறுமையை ஒழித்து, அனைத்து மக்களும் பயனடையத்தக்க வகையிலான உயர் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை மேலும் விரிவாக்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது.

அதனை முன்னிறுத்தி கொள்கை ரீதியானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான செயற்திட்டம் தொடர்பில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் முதலீட்டு விரிவாக்கம் தொடர்பான அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த உபகுழுவில் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, காமினி லொகுகே, பந்துல குணவர்தன, டளஸ் அழகப்பெரும, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, விமல் வீரவன்ச, மஹிந்த அமரவீர, எஸ்.எம்.சந்திரசேன, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரண, பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன மற்றும் அலி சப்ரி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

அதேவேளை மேற்படி உபகுழுவின் செயற்பாடுகளுக்காக இராஜங்க அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, ஜயந்த சமரவீர, திலும் அமுணுகம, டி.வி.சானக, நாலக கொடஹேவா மற்றும் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியிருக்கிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி அமைச்சரவையினால் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கும் தேசிய வர்த்தகக் கொள்கைத்திட்டத்தைத் தயாரிக்கும் போது அதனுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் உள்வாங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கும் அரசாங்கம்,

எனவே தற்போதை சூழ்நிலைக்குப் பொருந்தக்கூடிய வகையிலான புதிய தேசிய வர்த்தக கொள்கைத்திட்டத்தைத் தயாரிப்பதற்கு அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: