சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் நோக்கில் ஆய்வு – ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Thursday, October 5th, 2023

சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் நோக்கில் ஆய்வொன்றை மேற்கொண்டு பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்று (03) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது

பல்வேறு பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் முழுமையான நலன்புரிகள் தொடர்பில் பரந்த ஆய்வொன்றை மேற்கொண்டு பரிந்துரைகளை முன்மொழிவதற்காக 2023 ஏப்ரல் 19 ஆம் திகதியன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய மேற்படி குழு நியமிக்கப்பட்டிருந்தது.

நிறுவனச் சூழல், பெற்றோரின் அரவணைப்பு இன்மை, குடும்பப் பிரச்சினைகள், சமூக ஊடக பாவனை, சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் பரந்த அளவிலான விடயப்பரப்பு தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.

நவீன சமூகத்தின் தேவைகளை நிவர்த்திப்பதை இலக்காக கொண்டு சிறுவர் பாதுகாப்புக்காக இயங்கும் நிறுவனங்கள், நிர்வாகங்கள் மற்றும் சட்ட பாதுகாப்பின் போதுமான தன்மை தொடர்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு விதமான வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் மற்றும் அனாதரவாக விடப்பட்ட சிறுவர்களின் உடல், உளச் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதனூடாக சிறுவர்கள் வன்முறைகளில் ஈடுபடும் தன்மை தொடர்பில் கவனம் செலுத்தி சிறுவர் பாதுகாப்புக்கு அவசியமான சமூக பங்களிப்பு தொடர்பிலான புதிய பிரவேசங்கள் பற்றிய விடயங்களும் ஆராயப்பட்டுள்ளன.

சிறுவர்களுக்காக மேற்கொள்ளப்படும் நிறுவனம் சார்ந்த பாதுகாப்புக்களை மட்டுப்படுத்தி குடும்ப மட்டத்திலான பாதுகாப்பினை அதிகரிப்பதற்கான செயற்பாடுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கான சிறுவர் சீர்த்திருத்த இல்லங்கள் மற்றும் மத்திய நிலையங்கள், அரசாங்கத்தின் அனுமதி பெற்ற விசேட பாடசாலைகளில் இருக்கும் மாணவர்களை சாதகமான முறையில் சமூகமயப்படுத்தும் நோக்கில் ” நலனூக்க புனர்வாழ்வு செயன்முறை” தொடர்பிலும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழ்க்கை திறனுக்காக வலுவூட்டல் மற்றும் மக்கள் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி, சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையங்களில் இருக்கும் சிறுவர்களை சாதகமான முறையில் சமூகமயப்படுத்துவதற்கான பரிந்துரைகளும் அறிக்கையில் உள்ளடங்கியுள்ளன.

மேலும் சிறுவர்கள் பல்வேறுபட்ட வன்முறைகளுக்கு இலக்காகுவதற்கான வாய்ப்புகளை குறைத்தல் மற்றும் மட்டுப்படுத்தல், அவ்வாறான சிறுவர்கள் எதிர்கொள்ளும் வன்முறை வடிவங்களை அறிதல் மற்றும் அறிக்கையிடல், முகாமைத்துவ , பிரதிச் செயற்பாடுகளுக்கான பொறிமுறையை வலுவூட்டலுக்கான குறுகிய மற்றும் இடைக்கால, நீண்ட கால கொள்கை மற்றும் பரிந்துரைகளும் இந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: