வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் விவாதம்!

Saturday, June 29th, 2024

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள்பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி முற்பகல் 9.30 அளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன் பிற்பகல் 5 மணிவரை விவாதத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அன்றைய தினம் விசேட உரையொன்றை நிகழ்த்தவிருப்பதாகவும் நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 5 மணிவரை இரண்டாவது நாளாகவும் விவாதத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பின்னர் மாலை 5 மணியளவில் குறித்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர் குழுவுடனும் சீனாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கியான எக்ஸிம் வங்கியுடனும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனுமதியை, நிதி அமைச்சருக்கு வழங்குவதற்காக இந்தத் தீர்மானம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: