வெளிநாடுகளில் உள்ள 65 இலங்கை தூதரகங்களை தொடர்ந்தும் நடத்தி செல்வது தொடர்பில் அவதானம் – இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவிப்பு!

Thursday, March 24th, 2022

டொலர் நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் உள்ள 65 இலங்கை தூதரகங்களை தொடர்ந்தும் நடத்தி செல்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக பிராந்திய உறவு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

65 இலங்கைத் தூதரகங்களில் சேவையாற்றுபவர்களுக்கான கொடுப்பனவை செலுத்த முடியாதுள்ளது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் அதனை தொடர்ந்தும் நடத்தி செல்வதால் ஏற்படும் பயன் என்ன என்பது குறித்தும் ஆராய வேண்டியுள்ளது என இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல, குறித்த தூதரகங்கள் மூடப்படுவதால், அங்குள்ள இலங்கையர்களே அதிகம் பாதிக்கப்படும் நிலைமை ஏற்படும் என சுட்டிக்காட்டினார்.

அதன்பின்னர் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், சமிந்த விஜேசிறி, அரசாங்கம் முறையற்ற வெளிவிவகார கொள்கையை கடைப்பிடிப்பதாக தெரிவித்தார்.

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளினது தூதரங்களை மாத்திரம் நடத்தி சென்று ஏனைய தூதரகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பது சிறந்த விடயமல்ல. ஏனைய நாடுகளினது நட்புறவின்றி பொருளாதார ரீதியில் எவ்வாறு இலங்கை முன்னேற முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: