மாணவனின் எதிர்காலம் முக்கியமானது. அதைவிட பொதுமக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது  –  நிதிபதி இளஞ்செழியன்!

Monday, July 11th, 2016

யாழ் நகரத்தின் பிரபல கல்லூரியொன்றின் மாணவன் செந்தூரன் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதால், அவரை பிணையில் விடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை யாழ் மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கைக்குண்டு ஒன்றை உடைமையில் வைத்திருந்தார் என்னும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மாணவன் இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற இருக்கின்றமையினால் அவரை பிணையில் விடுமாறு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

எனினும் அவரின் மனு நிராகரிக்கப்பட்டு , சிறையில் இருந்தவாறு பரீட்சை எழுத நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த மே மாதம் 9ம் திகதி கைது செய்யப்பட்ட மாணவன் செந்தூரனின் உடைமையில் கைக்குண்டு ஒன்று இருந்ததாக பொரலிசார் குற்றம் சுமத்தினர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட நாள் முதல் யாழ் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைவாக அந்த மாணவன் விளக்கமறியலில் இருந்து வருகின்றார்.

எனினும் இவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டியிருப்பதனால், அவரை பிணையில் விடுமாறு கோரி அவசர பிணை மனுவொன்று யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மாணவன் சார்பில் பிணையில் விடுதலை செய்யுமாறு விண்ணப்பிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,ஆவணி மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு மாணவன் செந்தூரன் தோற்றவுள்ளார். பரீட்சைக்கான திகதி அண்மித்துக் கொண்டிருக்கின்றது.

எனவே, இந்த பிணை மனுவை அவசர மனுவாகக் கருதி பரிசீலனை செய்து அந்த மாணவனின் எதிரகாலத்தைக் கருத்திற்கொண்டு அவரை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும்.இந்த மாணவன் கல்வியிலும் அதேபோன்று விளையாட்டுத் துறையிலும் சிறந்தவராவார். க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில மொழி மூலம் படித்து, 7ஏ ஒரு பி ஒரு சி உட்பட 9 பாடங்களில் சித்தியடைந்துள்ளார்.

இவர் மாணவர் தலைவனாகச் செயற்பட்டுள்ளார். மெய் வல்லுனர் இல்லத் தலைவனாகவும், மெய்வல்லுனர் தலைவனாகவும் விளங்கியதுடன். 17வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உயரம் பாய்தலில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தையும், அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச மட்டத்திலான உயரம் பாய்தல் போட்டியில் 2ம் இடத்தையும் பெற்றுள்ள சிறந்த மாணவனாவார்.எனவே, அவருடைய எதிர்காலத்தை மேல் நீதிமன்றம் கருத்திற் கொண்டு அவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக அவரை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும், என அந்த பிணை மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை திங்களன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி இளஞ்செழியன், இந்த மாணவன் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதுவதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது.அவர் கைக்குண்டு வைத்திருந்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது பாரதூரமான வழக்கு என்பதால் இந்த பிணை மனுவை அவசர மனுவாக கவனத்தில் எடுத்து பிணை வழங்க முடியாது என தெரிவித்தார்.

அவர் தனது கட்டளையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் அதிக அளவில் வன்செயல்கள் இடம்பெற்றிருந்தன. இந்த மாணவனும், அவருடன் சேர்ந்த குழுவினரும் கைது செய்யப்பட்டதன் பின்னர் யாழ் மாவட்டம் அமைதி நிலைமைக்குத் திரும்பியது. இந்த மாணவனுக்கு எதிராக பல வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மாணவனின் எதிர்காலம் மிக முக்கியமானது. அதைவிட பொதுமக்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியமானது. குற்றம் சாட்டப்பட்ட இந்த மாணவன் சில மாதங்கள் தலைமறைவாகியிருந்ததன் பின்னரே, பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.இவருடன் சேர்ந்து பலர் கைது செய்யப்பட்டனர். இவரை பிணையில் விடுவது யாழ் குடாநாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயற்பாட்டை ஏற்படுத்திவிடும்.

இவர் கைக்குண்டு வைத்திருந்தார் என்று இவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு பாரதூரமானது மட்டுமல்ல. அது மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட வேண்டிய வழக்குமாகும். எனவே, இத்தகைய வழக்கு சம்பந்தப்பட்ட பிணை மனுவை அவசர மனுவாகக் கருதி பிணை வழங்க முடியாது.

எனவே, இந்த மாணவனை பிணையில் விடுமாறு கோரும் மனுவை இந்த நீதிமன்றம் நிராகரிக்கின்றது. அந்த மாணவன் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதில் எந்தவிதத் தடையுமில்லை. அவர் விளக்கமறியலில் இருந்தவாறே பரீட்சைக்குத் தோற்ற முடியும். இவ்வாறு பரீட்சை எழுதுவதற்குரிய அனுமதியை நீதவான் நீதிமன்றத்தில் பெற்று, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ள முடியும் என நீதிபதி இளஞ்செழியன் தனது கட்டளையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தப் பிணை மனு தொடர்பில் தங்கள் தரப்பு நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும், சட்டமா அதிபருக்கும் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ள நீதிபதி இந்த மனு மீதான வழக்கை எதிர்வரும் 08.08.2016ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

Related posts: