வெயிலில் குடிதண்ணீர்ப் போத்தல்கள், மென்பானங்களை வைக்க வேண்டாம் – சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தல்!

யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக வெயில் உள்ள இடங்களில் குடிதண்ணீர்ப் போத்தல்கள், மென்பானங்கள், இளநீர் போன்றவற்றை வைக்க வேண்டாம் என வியாபாரிகளுக்கு சாவகச்சேரி சுகாதாரப்பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன் அவற்றை திறந்த வாகனங்களில் ஏற்றி வெயிலில் கொண்டு சென்று விற்பனை செய்வதனையும் நிறுத்துமாறும் தவறும் பட்சத்தில் அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரப்பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பில் சுகாதாரப்பிரிவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மென்பானம் மற்றும் குடிநீர் போத்தல்களில் வைக்கப்பட்ட அதிக வெப்பம் அவற்றின் மீது பட்டால் அவற்றில் உள்ள இரசாயன பதார்த்தங்ககள் பழுதடையும் அபாயம் உள்ளது.
அதனை பொதுமக்கள் வாங்கி பருகும் போது நோய்கள் ஏற்படும் சாத்தியங்கள் உண்டு. எனவே அது தொடர்பில் பொது மக்களும் விழிப்பாக இருக்க வேண்டும். எமது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல கடைகளில் இவற்றை கடைகளுக்கு வெளியே அடுக்கி வைத்து காட்சிப்படுத்தியுள்ளதாகவும் வீதியோரங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளிலும் அவை வெய்யிலில் அடுக்கி வைக்கப்படடு உள்ளதாகவும் எமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை தொடர்பில் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இனிவரும் காலங்களில் அவற்றை பாதுகாப்பாக வைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடபட வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
|
|