வீட்டிலிருந்தவாறே வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள வசதி – 7ஆம் திகதிமுதல் அறிமுகப்படுத்தப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவிப்பு!

Tuesday, October 3rd, 2023

அனைத்து வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் புதிய கட்டமைப்பு எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் அறிமுகப்படுத்தப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், இந்தப் பொறிமுறையின் ஊடாக வீட்டிலிருந்தவாறே மக்களுக்கு வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதிகள் கிடைக்கும் என தெரிவித்தார்.

அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்தவும் முறைகேடுகளைத் தடுக்கவும் அரச சேவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படுவதற்கும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையின்போது அனைத்து அரச நிறுவனங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தை அனைத்து அரச நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தி அடுத்த மாதம் மார்ச் மாதத்திற்குள் முழுமையாக இணையவழி கட்டணங்களை செலுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கபட்டு வருவதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: