விளையாட்டுத்துறையின் முன்னேற்றம் மற்றும் அதன் திட்டமிடல்களை வகுப்பதற்காக நிபுணர் குழு – துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Sunday, March 26th, 2023

விளையாட்டுத்துறையின் முன்னேற்றம் மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கான நிபுணர்கள் குழுவொன்றினை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார்.

விளையாட்டு, கல்வி அமைச்சர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உட்பட நாடாளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களின் பங்கேற்புடன் கூடியதாக மேற்படி குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டுத் தொகுதியைப் பார்வையிட மேற்கொண்டிருந்த கண்காணிப்பு விஜயத்தின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அனைத்து விளையாட்டுத் துறைகளும் உள்ளடங்கும் வகையில் 100 வீர வீராங்கனைகளைத் தெரிவு செய்து அவர்களுக்கு அவசியமான வசதிகள் மற்றும் பயிற்சிளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் .

வருடாந்தம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சர்வதேசத்தை வெற்றிக்கொள்ளக்கூடிய வீர வீராங்கனைகளை ஒரு சில வருடங்களுக்குள்ளேயே இந்நாட்டில் உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதேபோல் பிள்ளைகளின் விளையாட்டுத் திறன்களை அவர்களில் 10 – 12 வயது காலத்தில் அறிந்துகொள்ள வேண்டியுள்ளதோடு, அதன்படி அவர்களுக்கான வாய்ப்புக்களை உருவாக்கிக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

கொழும்பின் பிரதான பாடசாலைகள் உள்ளடங்களாக நாட்டின் 100 பாடசாலைகளில் பேஸ் போல் விளையாட்டினை இவ்வருடத்தில் பிரபல்யப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கிய ஜனாதிபதி, பேஸ் போல் விளையாட்டில் ஆசியாவின் பிரதான தளமாக இலங்கை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பல்வேறு விளையாட்டுத் துறைகளிலும் தாய் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பின்னர் ஓய்வு பெறும் வீர வீராங்கனைகளுக்கு, அந்தத் தகுதிகளை அடிப்படைத் தகைமையாகக் கருதி பட்டப் படிப்பை பூர்த்தி செய்வதற்கான வசதிகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: