விசாரணைகளில் அலட்சியம்: யாழ் பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட  அனைவருக்கும் தண்டனை இடமாற்றம்!

Thursday, October 4th, 2018

குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளில் அசமந்தமாக இருந்து உண்மையான குற்றவாளிகள் தப்பிக்க துணை போவதாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் பல தடவைகள் கண்டிக்கப்பட்ட யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவிலுள்ள பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஒட்டுமொத்த பொலிஸாரும் அதிரடிளாக இடமாற்றப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நகரில் கடந்த மாதம் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் அசண்டையீனமாகச் செயற்பட்டதாக குற்றத்தடுப்புப் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தே இந்த தண்டனை இடமாற்றம் குற்றத்தடுப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அவர்களில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன், கடந்த காலத்தில் இந்தப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகள் தொடர்பான மீளாய்வு விசாரணையை யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நகரில் உள்ள கடை ஒன்றில் கடந்த 23ஆம் திகதி இரவு திருட்டு இடம்பெற்றுள்ளது. சுமார் 12 லட்சம் ரூபா வரையான பொருள்கள் திருட்டுப் போயுள்ளதாக கடை உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவுக்கு முறைப்பாடு வழங்கியுள்ளார்.

அந்த முறைபாட்டை உரிய வகையில் பெற்றுக்கொள்ளத் தவறிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர், கடந்த 24ஆம் திகதி சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

அத்துடன், திருட்டுச் சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டாளர் திருப்திகொள்ளும் வகையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அதனால் கடை உரிமையாளர் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ரி.கணேசநாதன் உள்பட பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

கடை உரிமையாளரின் குற்றச்சாட்டுத் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரால் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. திருட்டுச் சம்பவம் தொடர் குற்றச்செயல் பிரதேசத்தில் விசாரணை முன்னெடுப்பதற்கு செல்வது தொடா்பில் பதிவேடுகள் எதிலும் பதிவு செய்யாமல் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவ இடமான கடைக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

எனினும் அவர் முறைப்பாட்டுப் புத்தகத்தில் இரண்டு நாள்கள் கழித்துதான் தனது விசாரணை தொடர்பான பதிவுகளை முறைப்பாட்டுப் புத்தகத்தில் எழுதியுள்ளார் என்பது தெரியவந்தது.உடனடியாகவே அந்த உத்தியோகத்தரை பணி இடை நீக்கம் செய்ய யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணித்தார்.

மேலும் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்காமல் பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கொண்டுள்ள யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உள்பட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் வடக்கு மாகாணத்துக்குள் தண்டனை இடமாற்றம் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அலுவலகர் ஒருவர் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளார். காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் உள்பட பல்வேறு பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உள்பட உத்தியோகத்தர்கள் வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணையில் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாக யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், பல வழக்குகளில் அதிருப்தியை வெளியிட்டதுடன் திறந்த நீதிமன்றுக்கு அழைத்து கண்டித்துமிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

தடுப்பு முகாம்களில் வாழ்ந்த எம்மை தலைநிமிர்ந்து வாழவைத்தவர் டக்ளஸ் தேவானந்தா - மெலிஞ்சிமுனை கிராம தல...
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தல் இந்த நாட்டுக்கு எந்வொரு அநீதி...
தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தலால் கொரேனா தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கையில் வீழ்ச்சி - இலங்...