தாய்லாந்து – இலங்கை இடையே இருதரப்பு தடையற்ற வர்த்தக உடன்படிக்கை – பெப்ரவரியில் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதாக தாய்லாந்து அரசாங்கம் தெரிவிப்பு!

Thursday, December 7th, 2023

தாய்லாந்தும் இலங்கையும் இருதரப்பு தடையற்ற வர்த்தக உடன்படிக்கைக்கான (FTA) பேச்சுவார்த்தையை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த ஒப்பந்தம் பெப்ரவரி 2024 தொடக்கத்தில் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதாக தாய்லாந்தின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சோதிமா லெம்சவாஸ்திகுல் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து மற்றும் இலங்கை அதிகாரிகள் எதிர்வரும் 27-29 திகதிகளில் வர்த்தக உடன்படிக்கைக்கான எட்டாவது சுற்று பேச்சுவார்த்தைக்காக சந்திக்க உள்ளதாக பாங்காக் போஸ்ட் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைகள் இறுதியான சில முடிவுகளை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் டிசம்பர் மற்றும் ஜனவரியில் இறுதிச் சுற்று பேச்சுவார்த்தைகள் மூலம் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் எனவும் சோதிமா லெம்சவாஸ்திகுல் கூறியுள்ளார்.

சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான ஒப்பந்தம் இலங்கையில் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்பதாக இலங்கை-தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (SLTFTA) 6 ஆவது சுற்று பேச்சுவார்த்தை ஓகஸ்ட் 21-23ஆம் திகதிவரை தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்றது.

வர்த்தக பேச்சுவார்த்தைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமும் தாய்லாந்தின் பிரதான அதிகாரியுமான அவுரமன் சுப்தவீதும் மற்றும் இலங்கை பிரதிநிதிகள் தலைமையில் குழுவுடன் இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

தாய்லாந்தின் பிரதிநிதிகள் குழுவில் வெளியுறவு அமைச்சு, வர்த்தக பேச்சுவார்த்தைகள் துறை, வெளிநாட்டு வர்த்தகத் துறை, தாய்லாந்து சுங்கத் துறை, விவசாய பொருளாதார அலுவலகம், தொழில்துறை பொருளாதார அலுவலகம், முதலீட்டு திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டன.

தாய்லாந்து முதலீட்டாளர்களுக்காக பிரத்தியேகமாக விசேட முதலீட்டு வலயமொன்றை ஸ்தாபிப்பதற்கு இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் ஆட்டோமொபைல்கள், வாகன உதிரிபாகங்கள், இயந்திரங்கள், மின்சாதனங்கள், உலோகங்கள், சர்க்கரை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதிகள் இலகுப்படுத்தப்படும்.

இலங்கையில் தாய்லாந்து தனது முதலீடுகளை உணவுகள், பானங்கள், ஜவுளி, ஆடைகள் மற்றும் நகைகள் உற்பத்தியில் விரிவுபடுத்த எதிர்பார்த்துள்ளது.

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இருவழி வர்த்தகம் 2022இல் 358 மில்லியன் டொலர்களாக இருந்தது.

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இருவழி வர்த்தகம் 285 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.

2016ஆம் ஆண்டு தாய்லாந்தின் துணைப் பிரதமராக இருந்த சோம்கிட் ஜதுஸ்ரீபிடக் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்தபோது, இலங்கையும் தாய்லாந்தும் முதன்முதலில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நிறுவுவது குறித்து ஆலோசனைகளை நடத்தியிருந்தன.

2016 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான கூட்டுத் திட்டத்தில் இரு நாடுகள் கையெழுத்திட்டன.

2018ஆம் ஆண்டு மே 8ஆம் திகதி இலங்கையுடனான சுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தைக்கான ஒப்புதலை தாய்லாந்து அமைச்சரவை அளித்தது.

பொருட்கள், சேவைகள், முதலீடு மற்றும் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கவனம் செலுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: