வழமைக்கு திரும்பியது அரச பேருந்து சேவைகள்!

Monday, November 30th, 2020

கொரூனா தொற்றின் காரணமாக தடைப்பட்டிருந்த அரச பேருந்து சேவைகள் இன்றுமுதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தூர இடங்களுக்கான பேருந்து சேவை கடந்த காலங்களில் பாரிய அளவில் குறைக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த சேவைகள் இன்றையதினம்முதல் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அத்துடன் பேருந்துகளில் பயணம் செய்ய மக்கள் அச்சம் கொண்டிருந்த நிலையில், அந்த அச்சத்தை போக்கும் வகையில் பேருந்து சேவைகள் உரிய வகையில் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கடமைகளுக்கு செல்கின்றவர்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில், போதிய அளவான பேருந்து சேவைகளை நடத்துமாறு, விடயத்துக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சுர் திலும் அமுனுகம, உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அத்துடன் தற்போது மேல் மாகாணத்தை தவிர, ஏனைய பகுதிகளில் தனியார் பேருந்து சேவைகளை உரிய வகையில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை அலுவலக தொடருந்து சேவைகள் உட்பட கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு பிரவேசிக்கும் மற்றும் அங்கிருந்து புறப்படுகின்ற 104 தொடருந்து சேவைகள் இன்றையதினம் இடம்பெறவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் நிலைமையில் இருந்து விடுவிக்கப்பட்ட இடங்களில் உள்ள தொடருந்து நிலையங்களிலும் இன்றுமுதல் தொடருந்துகள் நிறுத்தப்படும் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: