அனைத்து உறுப்பினர்களதும் சிறப்புரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும் – யாழ். மாநகரசபையில் ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Thursday, January 17th, 2019

யாழ் மாநகரசபையின் அனைத்து உறுப்பினர்களும் சமமாக மதிக்கப்படுவதுடன் அவர்களது சிறப்புரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா வலியுறுத்தியுள்ளார்.

யாழ் மாநகரசபையின் புதிய ஆண்டுக்கான முதலாவது அமர்வு இன்றையதினம் முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கடந்த வருடத்தின் இறுதி மாதத்துக்கான கூட்ட அறிக்கைகள் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் மூலம் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட்ட முறைமையின் பிரகாரம் 60 வீதமான உறுப்பினர்கள் வட்டார முறையூடாகவும் 40 வீதமானவர்கள் விகிதாசார முறையூடாகவும் உள்வாங்கப்பட்டனர்.

இதன் அடிப்படையில் இச்சபைக்கு உள்வாங்கப்பட்டதாக 45 உறுப்பினர்களுள் 18 உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையில் தெரிவாகியுள்ளனர். ஓர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் எந்த முறைப்படியானாலும் சரி அச்சபையின் உறுப்பினராக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்நேரத்திலிருந்து அச்சபையின் அனைத்து ஒதுக்கீடுகள் மற்றும் வேலைத்திட்டங்களில் சம உரிமை உடையவராக இருக்கின்ற நிலை காணப்படுகின்றது.

ஆனாலும் இந்த மாநகரசபையில் அவ்வாறானதொரு நிலை காணப்படவில்லை. இந்த புறக்கணிப்பான நிலை ஏன் இந்த மாநகரில் காணப்படுகின்றது. இந்த நிலையால் இந்த சபையில் விகிதாசார முறைப்படி தெரிவான 18 உறுப்பினர்களதும் தமக்கு, தமது கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை செய்யும் சந்தர்ப்பம் மறுக்கப்படுவதாகவும் கூறியதுடன் அவர்களது சிறப்புரிமையும் மீறப்படுவதாகவே காணப்படுகின்றது.

அந்தவகையில் எமது இந்த மாநகரின் வட்டார ரீதியான 27 உறுப்பினர்களுக்குரிய அனைத்து ஒதுக்கீடுகளும் விகிதாசார முறையூடாக தெரிவான ஏனைய 18 உறுப்பினர்களுக்கும் கிடைக்கவேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

Related posts: