வலி தெற்கு பிரதேசபையே எமது வயிற்றில் அடிக்காதே – ஜனாதிபதி பிரதமரிடம் நீதி கெட்டு மருதனார்மட வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

Thursday, October 29th, 2020

வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் இன்றையதினம் தமது வியாபார நடவடிக்கைகளை நிறுத்தி சந்தைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

மருதனார்மடம் பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் சந்தைக் கட்டிட தொகுதியில் வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படும் முறைமை தொடர்பாகவே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பிரதேச சபையினால் வழங்கப்பட இருக்கும் இடத்தின் அளவீடு தமது வியாபார நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு போதுமானதாக இல்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “மக்கள் பிரதிநிதிகளான உங்களுக்கு எங்களை மக்களாக தெரியவில்லையா?” “எமக்கு உரிய இடத்தினை பழையதுபோல் நிறைவாகத் தாருங்கள்” “உங்களுடைய முதலாளித்துவ அதிகாரத்தை ஏழைப் பாட்டாளிகள் மீது திணிக்காதே.” “வேண்டும் வேண்டும் நியாயம் வேண்டும்” என வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அத்தோடு தமக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டுமென கேரி, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரது புகைப்படம் அடங்கிய பதாதைகளையும் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் கையில் ஏந்தியிருந்தனர். இதனிடையே குறித்த விடயம் தொடர்பாக கடந்த 22 ஆம் திகதி பிரதேச சபைக்கு முன்பாகவும் வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: