கொரோனா தொற்றில் இருந்து மேலும் 765 பேர் குணமடைந்தனர் – 63 ஆயிரத்து 439 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர் என கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையம் அறிவிப்பு!

Thursday, November 5th, 2020

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 765 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வியாழக்கிழமை வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரையில் 6 ஆயிரத்து 623 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர். அத்துடன் நாட்டில் இதுவரையில் 12 ஆயிரத்து 187 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 6 ஆயிரத்து 623 பேர் குணமடைந்துள்ள நிலையில், 5 ஆயிரத்து 540  பர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும், இந்த வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரையில் 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே  முப்படையினரால் முன்னெடுக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 156 பேர் இன்று வியாழக்கிழமை தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர் எனகொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான தேசிய நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையில் இதுவரை 63 ஆயிரத்து 439 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 33 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 2 ஆயிரத்து 601 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் 89,000 இற்கும் அதிகமானோர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 22,000 குடும்பங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் 3 மாவட்டங்களில் மாத்திரம் 12,000 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேநேரம், சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களை கண்காணிப்பதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுயதனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ள ஒருவரேனும் வீடுகளிலிருந்து வௌிவரும் பட்சத்தில் அந்த செயற்பாடும் குற்றமாக கருதப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே யாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் கொரோனா தொற்று அச்சத்தால் மூடப்பட்ட கடைகள் இன்றைய தினம் திறக்கப்பட்டது.

கொரோனா தொற்று அச்சத்தால் நான்கு கடைகள் யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரியினால் மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த கடை உரிமையாளர்களுக்கு முதலாவது பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பதன் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த கடைகளை திறப்பதற்கு சுகாதாரப் பகுதியினரால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இன்று காலை குறித்த கடைகள் அனைத்தும் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டு திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: