யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 590 மில்லியன் ரூபா நிதியில்  நவீன வசதிகளைக் கொண்ட விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு!

Friday, September 23rd, 2016

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நவீன வசதிகளைக் கொண்ட விபத்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கான இரு மாடிக்கான கட்டட நிர்மாணப் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

உலக வங்கி இலங்கை அரசாங்கத்தின் ஊடாக வழங்கிய 590 மில்லியன் ரூபா நிதிப் பங்களிப்பில் முதல் இரு தளங்களுக்குமான வேலைகள் நடைபெற்று வருகிறது.  கடந்த மார்ச் மாதம்-21 ஆம் திகதி முதல் இரு தளங்களுக்குமான கட்டுமானப் பணிகள் வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தியினால் சம்பிரதாய பூர்வமாக அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

ஆறு தளங்களைக் கொண்டமைந்த கட்டத் தொகுதியில் முதலிரு தளங்களிலும் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு இயங்கவுள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரிவில் போதுமான இடவசதிகள் இன்மையால் நோயாளர்களும், வைத்தியர்களும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.விபத்து அவசர சிகிச்சைப் பிரிவின் கீழ் இயங்கும் சத்திர சிகிச்சை விடுதிகளில் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் அனுமதிக்கப்படும் பல நோயாளர்கள் தரையில் படுத்து உறங்க வேண்டிய நிலையும் காணப்படுகிறது. இந்த நிலையில் புதிதாக அமைக்கப்படும் இரு தளங்களைக் கொண்ட விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு மூலம் இதுவரை காலமும் நீடித்து வந்த இடநெருக்கடிக்குத் தீர்வு கிடைக்கும்.

2017 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதமளவில் முதலிரு தளங்களுக்குமான வேலைகள் நிறைவடையும். இலங்கை அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கப் பெற்ற பின்னர் ஏனைய தளங்களுக்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும். ஏனைய தளங்களில் அவசர சிகிச்சைப் பிரிவு, மருத்துவ சிகிச்சைப் பிரிவு போன்ற விடுதிகள் அமைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

unnamed

unnamed (1)

Related posts: