வலிகளை விட்டுச் சென்ற ஆழிப் பேரலையின் 19 ஆவது நினைவு நாள் இன்று – ஆயிரக்கணக்கான உறவுகள் கண்ணீர் சொரிய உடுத்துறை நினைவிடத்தில் நினைவுகூரல்!

Tuesday, December 26th, 2023

ஆழிப்பேரலை பேரனர்த்தம் ஏற்பட்டு 19 ஆண்டுகள் கடந்தள்ளது. ஆனாலும் அதன் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக உலகவாழ் மக்களால் மறந்துவிட முடியாது.

இதேபோன்ற ஒரு நாளில் யாரும் எதிர்பார்த்திராத சில நொடிகளில் இலட்சக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இன்று போல் ஒரு பூரணை தினத்தில் உலக வாழ் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய இயற்கையான பேரனர்த்தம் தான் இந்த ஆழிப் பேரலை.

2004 ஆம் ஆண்டுக்கு பின்னர் நத்தார் தினத்தின் அடுத்த நாளில் பூரணை தினம் வருவது இதுவே முதல் முறையாகும்‌.

நத்தாருக்கு மறுதினம் அனைவரும் தங்களது அன்றாட கடமைகளுக்காக தயாரான நிலையில், காலை 6.58 மணியளவில் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுக்கு அருகில் 9.1 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடற்சீற்றத்தினால் ஆசியாவின் 14 நாடுகளைச் சேர்ந்த 2 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 19 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்று இலங்கையில் தேசிய பாதுகாப்பு தினம் அனுஸ்ட்டிக்கப்பட்டது.

அதற்கமைய, ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் நாடுமுழுவதும் இன்று முற்பகல் 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  

குறித்த நிகழ்வுகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் காலியில் இன்று இடம்பெற்றது

இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் கடலலையால் பறிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு வடமராட்சி உடுத்துறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது

உடுத்துறை நினைவிடத்தில் நினைவுகூர்ந்து பறிக்கப்பட்ட உறவுகளை நினைத்து வாழும் உறவுகள் இன்று ஒப்பாரி வைத்து அழுத காட்சி அனைவரையும் கண்கலங்கவைத்தது.

குறிப்பக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகமான உயிர்கள் காவுகொள்ளப்பட்ட வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.அங்கு சுமார் ஆயிரத்து முப்பத்து எட்டு பேர் சுனாமி அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்டனர்.

பிரதான நிகழ்வு உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நினைவேந்தல் குழுவின் தலைவர் தலைமையில் இடம்பெற்றது.

இலங்கையின் தேசிய கீரம் ஒலிக்கப்பட்டதை அடுத்து ஆரம்பமான அஞ்சலி நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் நிலைவாலயத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரமுகர்களான கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன், , யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்டவர்கள் நினைவிடத்தில் மலர்மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்நிலையில் உடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களில் அவர்களின் உறவினர்கள் தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தியதுடன் அவர்கள் விரும்பி உண்ணும் உணவுகளைப் படைத்து ஒப்பாரி வைத்து அழுது தமது உள்ளகிடக்கைகளை கொட்டித் தீர்த்ததால் அப்பகுதி எங்கும் சோகமயமாகக் காட்சி அளித்தமை குறிப்பிடத்தக்கது

முன்பதாக 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரழிவில் சிக்குண்டு இலங்கையில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயிருந்தனர்.

குறிப்பாக இலங்கையின் 14 கரையோர மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. அத்துடன், 34 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2 இலட்சத்து 35 ஆயிரத்து 145 குடும்பங்களை சேர்ந்த 50 இலட்சத்து 2 ஆயிரத்து 456 பேர் பாதிப்பை எதிர்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் சுற்றுச்சூழல் மிகப்பாரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்த பின்னணியில், சுனாமி அனர்த்தத்தை இலங்கை மாத்திரம் அன்றி உலக நாடுகள் எதிர்கொண்டு இன்றுடன் 19 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு உலகளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

இந்த நிலையில், இலங்கையில் 2005 ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது

சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த மக்களை நினைவுகூறும் வகையில் ‘தேசிய பாதுகாப்புதினம்’ இன்று நாடளாவிய ரீதியில் அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்படி, உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

இதனிடையே, பெரலிய சுனாமி நினைவுத் தூபிக்கு முன்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தொன்னகோன் தலைமையில் இன்று பிரதான நிகழ்வு இடம்பெறமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: