உள்ளூராட்சித் திணைக்களம் மூலம் சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்கள் வகைப்படுத்தி சேகரிக்கப்படல் வேண்டும் – வடக்கின் ஆளுநர் வலியுறுத்து!

Tuesday, June 22nd, 2021

ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதற்கு சேதன பயிற்செய்கையில் ஈடுபடுவது காலத்தின் இன்றியமையாத தேவையாகவுள்ள இக்காலகட்டத்தில், அதற்கான முறையான திட்டம் ஒன்றை உருவாக்குவது மிக அவசியமானதாகும் என வடமாகாண ஆளுநர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்..

‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நச்சுத்தன்மையற்ற உணவுக்கான மக்களின் உரிமைகள் என்பதற்கிணங்க விவசாய துறைக்குள் சேதனப் பசளையின் பயன்பாட்டை ஊக்குவித்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

ஆளுநரின் செயலாளர், பிரதம செயலாளர், மற்றும் வட மாகாணத்திற்குட்பட்ட விவசாயத்துறைசார் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலர் குறித்த கலந்துரையாடிலில் கலந்துகொண்டனர்.

இதன்போது மண்ணுக்கு பொருத்தமான சேதனப் பசளையின் வகையை கண்டறிந்து அதனை கையாளுவதற்கான செயற்பாட்டை விவசாயிகள் மத்தியில் ஊக்குவித்தல், அதற்கான பயிற்சிகள் மற்றும் தேவையான நிதி உதவிகளை ஏற்பாடு செய்தல் போன்றவை தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், விவசாயிகளுடன் மிக நெருக்கமாக இணைந்து செயற்படுதல் அவசியம் என தெரிவித்த ஆளுநர், களை மற்றும் பூச்சிகளை பயிர்ச்செய்கை நிலங்களில் சேதன முறையில் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து நடைமுறையில் பயன்படுத்தி அதன் சாத்தியத்தன்மை பற்றி ஆராய்ந்து அறிக்கையிடுமாறும் துறைசார் தரப்பினருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அத்துடன், உள்ளூராட்சித் திணைக்களம் மூலம் சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்கள் பொதுமக்களால் கட்டாயமாக வகைப்படுத்தி சேகரிக்கப்படல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதுடன் அவற்றின் மூலம் உருவாகக்கூடிய சேதனப் பசளையின் அளவு மற்றும் விநியோகிக்கக் கூடிய அளவு என்பன பற்றியும் ஆராயப்பட்டது.

மேலும், சேதனப் பசளையினை உற்பத்தி செய்யும் விவசாயிகளை இனங்கண்டு அவர்களை ஊக்குவிப்பதுடன், ஊடகங்கள் வாயிலாகவும், கையேடுகள் மற்றும் கவர்ச்சிகரமான காட்சிப்படுத்தலினூடாகவும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், சேதனப் பசளை உற்பத்திக்கான இயந்திர உபகரணங்களை கொள்வனவு செய்தல் மற்றும் அதற்கான நிதி மூலங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. அத்தோடு, நீர் முகாமைத்துவத்திற்கும் விவசாயத்திற்கும் மிகநெருங்கிய தொடர்பு காணப்படுவதனால் விவசாயம் தொடர்பிலான தீர்மானங்களை மேற்கொள்கையில் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளின் கருத்துக்களினை கேட்டறிவது அவசியமானது எனவும் ஆளுநர் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு இராணுவ சிப்பாய்க்கு உத்தரவு!
நுண்நிதி இலகுகடன் வழங்கும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவ...
அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி – ஆராயப்படுவதாக இராணுவத் தளபதி தெரி...