வர்த்தகரை அறைக்குள் பூட்டி தாக்கினார் மொத்த வியாபாரி : 85000 ரூபாவைப் பறித்ததுடன் காசோலையில் கையொப்பமும் பெற்றதாகக் குற்றச்சாட்டு!

Thursday, April 20th, 2017

பொருள்கள் வாங்கச் சென்ற வர்த்தகரை மொத்த வியாபாரியொருவர் உள்ளிட்ட 17 பேர் அறையினுள்  இழுத்துச்சென்று 3 மணி நேரம் கதறக் கதறத் தாக்கி விட்டு அவரிடமிருந்து 85 ஆயிரம் ரூபா பணத்தைப் பறித்ததுடன் வழங்கிய காசோலையில் 5 லட்சம் ரூபாவை மேலதிகமாகப் பதிவு செய்து கையொப்பம் பெற்றுவிட்டு வெற்றுத் தாள்களிலும் கையொப்பம் பெற்றுள்ளனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான வர்த்தகர் மறுநாள் வைத்தியசாலையில் சேர்க்கப் பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தாக்குதலுக்கு இலக்கான வர்த்தகர் தெரிவித்ததாவது:

தென்மராட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த நான் பல வருடங்களாக யாழ்ப்பாணத்துக்கு வெளியே உள்ள மொத்த வர்த்தக நிலையத்தில் பணமும் காசோலையும் வழங்கிப் பொருள்களை வாங்கி வந்தேன்.அவ்வாறு கடந்த சனிக்கிழமை 90 ஆயிரம் ரூபா காசோலையும் 30 ஆயிரம் ரூபா பணமும் கொடுத்து ஒருவரைக் குறித்த வர்த்தக நிலையத்துக்கு வாகனத்துடன் அனுப்பியிருந்தேன்.

சிறிது நேரத்தில் கணக்குகளைச் சீர்செய்யவேண்டுமென என்னை வருமாறு மொத்த விற்பனை நிலையத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. கடையை மூடிவிட்டு எனது 6 வயது மகனுடன் அங்கு சென்றிருந்தேன். கணக்குகள் சரிபார்க்க வேண்டுமென மாடிக்கு அழைத்துச் சென்ற கடை உரிமையாளரும் அவருடன்  சேர்ந்த 16 பேரும் அறையொன்றுக்குள் வைத்து மாறி மாறித் தாக்கினர்.

காரணம் தெரியாமல் ஏன் தாக்குகிறீர்களெனக் கேட்டபோது களஞ்சியத்தில் மோசடி செய்துள்ளாய் எனக் கூறி என்னால் அனுப்பப்பட்ட 90 ஆயிரம் ரூபா காசோலையில் 5 என்ற இலக்கத்தை முன்னுக்குப் பதிவு செய்து 5 லட்சத்து 90 ஆயிரம் ரூபாவுக்குக் கையொப்பம் பெற்றனர். அத்துடன் வெள்ளைத் தாள்களிலும் கையொப்பம் பெற்ற பின்னர் பொருள்கள் வாங்கி வரச் சென்றவரையும் எனது மகனையும் விடுவித்தனர்.

ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருள் கொள்வனவுக்குப் பற்றுச்சீட்டு போடப்பட்ட     போதிலும் பொருள்கள் வழங்கப்படவில்லை. நீ எந்தப் பொலிஸில் சென்று முறையிட்டாலும் எமக்குப் பயமில்லை எனக் கூறினர். அங்கருந்து வீடு சென்று நேற்று முன்தினம் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டேன். வைத்தியசாலைப் பொலிஸார் என்னிடம் விவரம் பெற்று கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிப்பதாகக் கூறிச் சென்றனர். –  என்றார்.

Related posts: