வரும் திங்கட்கிழமையிலிருந்து பார்த்தீனிய ஒழிப்பு வாரம் : யாழ். மாவட்டச் செயலர்!

Saturday, December 15th, 2018

யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி தொடக்கம் ஒரு வாரம் பார்த்தீனிய ஒழிப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படும். அந்த வாரத்தில் சகலரும் பார்த்தீனிய ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் அறிவித்தல் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

யாழ் மாவட்டத்தில் பார்த்தீனியத்தின் பரம்பல் அதிகமாக உள்ளமை பற்றி உங்களுக்குத் தெரியும். அதனை உடனடியாக ஒழிக்க வேண்டும். காலந்தாழ்த்தினால் அதில் உள்ள பூ காயாக மாறி விதையை தோற்றுவிக்கும். பின்னர் அதன் பரம்பல் பல மடங்கு அதிகரிக்கும். அதற்கு எவரும் இடமளிக்கக் கூடாது. ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் பார்த்தீனியம் ஒழிப்பு தொடர்பான அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரிகள் உள்ளனர். அவர்களையும் அரச அதிகாரிகள் மற்றும் சமூக பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்துக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

அந்தக் குழு பார்த்தீனியம் உள்ள இடங்களை இனங்காணுதல், அழித்தல், விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற பணிகளைச் செய்யும். இது டெங்கு ஒழிப்பு போன்று தொடர்ச்சியான செயற்பாடாக அமைய வேண்டும்.

எதிர்வரும் திங்கட்கிழமை 17 ஆம் திகதி தொடக்கம் பார்த்தீனியம் ஒழிப்பு வாரமாக அறிவிக்கப்படுகின்றது. ஆகவே விவசாய நிலம், வீதி, பொது இடம், திணைக்களங்கள், பாடசாலைகள் எல்லாவற்றிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு இராணுவத்தினர், பொலிஸாரின் உதவிகளையும் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கென அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகளின் தொடர்பு இலக்கங்கள், விபரங்கள் ஒவ்வொரு குழுவுக்கும் வழங்கப்படும் – என்றார்.

Related posts: