வரிக்கொள்கைக்கான தீர்வு வரை பணிகளை ஆரம்பிக்க போவதில்லை – விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவிப்பு! – தொடர்ந்தும் நிராகரித்தால் கல்வி அத்தியாவசியமாக்கப்படும் என ஜனாதிபதி எச்சரிக்கை!

Thursday, April 20th, 2023

அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள வரி கொள்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கும் வரை உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை ஆரம்பிக்க போவதில்லை என விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் ஊடக பேச்சாளர் சாருதத்த இளங்கசிங்ஹ இதனைத் தெரிவித்துள்ளார்.

நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தற்காலிக தீர்வை ஏற்க தயாரில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அரச வங்கி மூலம் பெற்று கொண்ட கடன் செலுத்தலுக்காக 6 மாத நிவாரண காலத்தை வழங்குவதற்காக அரசாங்கத்திடம் இருந்து சிறந்த பதில் கிடைக்கப் பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை மதிப்பீட்டு பணிகள் தொடர்பில் இந்த வாரத்துக்குள் முறையான யோசனை மற்றும் தீர்வு அடங்கிய பொருத்தமான வேலைத்திட்டத்தை முன்வைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் பரீட்சைகள் தொடர்பான செயற்பாடுகளை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பரீட்சை நடவடிக்கைகளை அவசர சேவையாக அறிவிப்பதற்கு அவசியமான சட்டங்களை தயாரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அறிவித்த ஜனாதிபதி கடந்த முறை பரீட்சை மதிப்பீட்டு பணிகளை மேற்கொண்ட குழுவினரை பயன்படுத்தி இந்த முறை கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அந்த பணிகளில் ஈடுபடாவிட்டால் குறித்த தரப்பினருக்கு எதிராக சட்டநடவடிக்கையை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் இது தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாடுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: