வடக்கு கிழக்கு மாகாணங்களில் தண்ணீர் வழங்கலைத் துரிதமாக்க புதிய கருத்திட்டங்கள் முன்வைப்பு !

Tuesday, November 13th, 2018

பாலியாறு, பறங்கியாறு உள்ளடங்கலாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள நீர் வழங்கலைத் துரிதப்படுத்த புதிய கருத்திட்டங்கள் பற்றிய முன்மொழிவுகள் செயலணியுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான அரச தலைவரின் சிறப்புச் செயலணியின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான கருத்திட்டங்களைத் துரிதப்படுத்துவதற்கான புதிய கருத்திட்டங்கள் இனங்காணப்பட்டு நெறிப்படுத்தப்பட்டு ஒருங்கிணைக்கவும் கண்காணிப்பதற்குமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள கைத்தொழில்கள் தொடர்பில் ஆனையிறவு உப்பளத்தை வலுப்படுத்தல், குறிஞ்சைத் தீவு உப்பளத்தை வலுப்படுத்தல், ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீளச் செயற்படுத்தல், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீளச் செயற்படுத்தல், அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலையை மீளச் செயற்படுத்தல் என்பன தொடர்பாகத் துரித நடவடிக்கை எடுக்கும்படி அரச தலைவர் பணித்துள்ளார்.

முதலீட்டுச் சபையின் உதவியுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒரே கூரையின் கீழ் முதலீடுகளின் அதிகரிப்பை ஊக்குவித்தல் பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அது தொடர்பாக அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற நெறிப்படுத்தப்பட்டுள்ளது.

உன்னிச்சைக் குளத்தின் நீர் வழங்கல் விரிவுபடுத்தப்பட்டு அந்தக் கிராம மக்களுக்கு நீர் வழங்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மன்னாரில் மடு பிரதேசம் புனித பிரதேசமாக்கப்பட்டு அங்கு நீர் வழங்கல், யாத்திரிகர்களுக்கான தங்குமிட வசதிகள் அமைத்தல் தொடர்பிலான கருத்திட்டங்களை துரிதப்படுத்தல் தொடர்பாகவும் 16 ஆம் திகதி டிசெம்பர் மாதம் 2018 இல் மன்னார் மடு பிரதேச வேலைதிட்டங்களை அரச தலைவர் மூலமாக ஆரம்பித்தல் தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் முதற்கட்டமான 15 ஆயிரம் வீடுகளை மீள்குடியேற்ற அமைச்சினூடாக அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. ஒலுவில் துறைமுகம் தொடர்பான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில பிரச்சினைகளை முன்மொழிந்தனர். அம்பாறையில் சுனாமி பாதித்த 500 வீடுகளைப் பகிர்ந்தளிப்பது தொடர்பில் துரித தீர்மானங்கள் எடுக்கும்படி மாவட்டச் செயலருக்குப் பணிக்கப்பட்டது. என்றுள்ளது.

Related posts:

நாடு முழுவதும் கொரோனா தொற்று வலயமாக அறிவிக்க நேரிடும் - பிரதிப் பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை!
பாடசாலை மாணவர்களுக்கு பாலுக்கு பதிலாக கஞ்சி - அமைச்சரவைக்கு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்மொழிவ...
22 ஆவது திருத்த சட்டத்தின் இறுதி நகல் இன்று அமைச்சரவையில் - அங்கீகரிக்கப்பட்டதும் இன்றிரவே வர்த்தமான...