வடக்கில் இதுவரை 11 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா தொற்றுறுதி – 164 பேர் மரணம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Thursday, July 29th, 2021

இதுவரை காலமும் கொரோனாத் தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து தற்போதுவரை வட மாகாணத்தில் 11 ஆயிரத்து 800 பேர் தொற்றுக்குள்ளானதுடன் 164 பேர் உயிரிழந்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் கொரோனாத் தொற்று நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் – வட மாகாணத்தைப் பொறுத்தவரை கொவிட்-19 நிலவரம் என்பது கடந்த ஜனவரி மாதம்முதல் தொற்று படிப்படியாக ஆரம்பித்து ஜூன் மாதத்தில் 3 ஆயிரத்து 594 என அதிகூடிய தொற்றாளர்கள் வடமாகாணத்தில் இனம்காணப்பட்டனர்.

அதன்பின்னர் ஜூலை மாதத்தில் அந்தப் பரம்பல் குறைவடைந்து தற்போது வரை 2 ஆயிரத்து 241 தொற்றாளர்கள் வடமாகாணத்தில் இனங்காணப்பட்டனர். அவற்றில் யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 549 பேரும் வவுனியாவில் 176 பேரும்  மன்னாரில் 168 பேரும் கிளிநொச்சியில் 220 பேரும் முல்லைத்தீவில் 128 பேரும் தொற்றாளாராக இனங்காணப்பட்டனர்.

இதுவரை காலமும் கொரோனாத் தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து தற்போதுவரை வட மாகாணத்தில் 11 ஆயிரத்து 800 பேர் தொற்றுக்குள்ளாயினர்.

அதில் யாழ்ப்பாணத்தில் 7 ஆயிரத்து 25 பேரும் வவுனியாவில் ஆயிரத்து 607 பேரும்  மன்னாரில் 977 பேரும் கிளிநொச்சியில் ஆயிரத்து 215 பேரும் முல்லைத்தீவில் 876 பேரும் தொற்றாளாராக இனங்காணப்பட்டனர்.

அதேநேரம் கொரோனாவினால் தற்போதுவரை வட மாகாணத்தில் 164 பேர் உயிரிழந்தனர்.அதில் யாழ்ப்பாணத்தில் 122 பேரும் வவுனியாவில் 23 பேரும்  மன்னாரில் 8 பேரும் கிளிநொச்சியில் 4 பேரும் முல்லைத்தீவில் 7 பேரும் உயிரிழந்தனர்.

சில வாரத்துக்கு முன்பு கொரோனா  தொடர்பான சுகாதாரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதற்கு பின்னர் குறிப்பாக இந்து ஆலயங்களில் பெருமளவான சுகாதார நடைமுறையை மீறி  திருவிழாக்கள் நடைபெற்றன. அதற்குப் பின்னர் கொரோனா கொத்தணி பல இடங்களில் உருவாகி இருக்கின்றன.

டெல்டா  தொற்று பரவலடைந்து வரும் நேரத்தில் தேவையற்ற விழாக்களை கட்டுப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக நாங்கள் விரைவில் அறிவித்தலை வெளியிடவுள்ளோம்.

இதேபோன்று திருமணம், பூப்புனித நீராட்டு விழா, பிறந்தநாள் விழாக்களை மண்டபங்களிலோ அல்லது தங்களது வீடுகளிலோ நடத்துவது தொடர்பிலோ சுகாதார வைத்திய அதிகாரியினுடைய அனுமதி வேண்டும். மண்டபங்களின் இடவசதிக்கேற்ப சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். இவற்றை சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பர் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பலாலி அன்ரனிபுரம்  மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு!
கிராம மட்ட புதிய தொழிலதிபர்களை உருவாக்க புதிய தொழில்நுட்பம் தாயார் - வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செய...
எரிபொருள் விலைகளை அதிகரிப்பதை தவிர அரசாங்கத்திற்கு வேறு வழிகள் எதுவுமிருக்கவில்லை - அமைச்சர் டலஸ் அல...