எதிர்வரும் காலங்களில் இலங்கையில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரி கோப்பு திறக்கப்படும் – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Wednesday, October 12th, 2022

எதிர்வரும் காலங்களில் மருத்துவர்கள் மற்றும் தனியார் வகுப்பு ஆசிரியர்கள் ஆகியோரிடமும் வரி அறவிடும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஊடக மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் இலங்கையில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒரு வரி கோப்பு திறக்கப்படும்.

அவர்களின் வருமானத்துக்கு ஏற்ப வரி விதிக்கப்படும். தனியார் சேனலிங் செய்யும் மருத்துவர்கள் மற்றும் தனியார் வகுப்பு நடத்தும் டியூசன் ஆசிரியர்கள் ஆகியோர் பெரும் தொகை வருமானத்தைப் பெற்றுக் கொள்கின்ற போதிலும் அவர்கள் இதுவரை வரி செலுத்துவதில்லை.

எனவே அவர்களையும் வரி செலுத்தும் வலையமைப்புக்குள் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கூடுதல் வருமானத்தைப் பெறுவோரிடம் நேரடி வரி அறவிடப்படாத போதில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை மேற்கொள்ள மறைமுக வரிகளை விதிக்க வேண்டியேற்படும்.

அது ஏழை மக்களுக்கு சுமையாக அமைந்து விடும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: