மக்களிடம் மன்னிப்பு கோரினார் எரிசக்தி அமைச்சர் – அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்காக எரிபொருள் நிலையங்களை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்து!

Monday, June 20th, 2022

அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்காக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிலையங்களை வெள்ளிக்கிழமைகளில் ஒதுக்குவதற்கு எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார். .

எரிபொருள் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பணியாளர்கள் பணிக்கு சமுகமளிக்க முடியாத காரணத்தினால் வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் கூட தாமதமாக நடைபெறுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் இணைந்து கவலை தெரிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எனவே, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அவசர சுகாதார சேவைகளுக்கு ஒதுக்கப்படும் வகையில், மாவட்ட வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களை பரிந்துரைக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சுகாதார ஊழியர்களுக்கும் பொது போக்குவரத்து மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

இதேனிடையே நாட்டு மக்களிடம் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் அவர் இவ்வாறு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும், நாட்டிற்கு எரிபொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான டொலர்கள் திரட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், பெற்றோல் கப்பலொன்று 23 ம் திகதியும், டீசல் கப்பலொன்று எதிர்வரும் 24ம் திகதியும் நாட்டை வந்தடைய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: