வங்கிகளில் பெற்ற கடனுக்கான வட்டி விகித உயர்வைக் கட்டுப்படுத்தி சலுகைகளை வழங்க முடியாது – வட்டிவீத அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, November 19th, 2022

வங்கிகளில் பெற்ற கடனுக்கான வட்டி விகித உயர்வைக் கட்டுப்படுத்தி சலுகைகளை வழங்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்திலேயே உறுப்பினர்களிடம் இதனை அறிவித்துள்ளார்.

வங்கிகளில் குறைந்த வட்டியில் வாங்கிய கடனுக்கு தொழிலதிபர்கள், மக்கள் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, “கடனை அடைக்க எங்களிடம் பணம் இல்லை. பெரிய வரவு செலவு திட்ட இடைவெளி உள்ளது. வட்டி விகித உயர்வு தற்காலிகமானது.

முதலில் நீங்கள் அதை கட்டுப்படுத்த வேண்டும். தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் பேசி வருகிறோம். ஜனவரிக்குள், இந்தியாவும் சீனாவும் எங்களுக்கு சாதகமாக பதிலளிக்கும். கடன் மறுசீரமைப்பு நடந்தவுடன் வட்டி விகிதம் மாறும்” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, வங்கி வட்டி வீத அதிகரிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்மைகளை விளக்கியிருந்தார்..

விரைவான வட்டி வீதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வங்கி வாடிக்கையாளர்கள் குறுகிய காலத்திற்கு தமது கடனுக்கான வட்டியை மாத்திரம் செலுத்துவதற்கு குறித்த வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் எனவும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை வட்டி வீத அதிகரிப்பால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பெறப்பட்ட கடன்களுக்கான வட்டி வீதங்கள் அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கே இந்த திட்டம் பொருந்தும்.

நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை தொடர்பான ஆலோசனைக் குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதுள்ள நிதிக் கொள்கைகளின் மூலம், அடுத்த வருட இறுதிக்குள் பணவீக்கம் 4 முதல் 5 சதவீதமாகக் குறைவடையும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டினார்.

000

Related posts:


சீனாவில் இடம்பெறவுள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ள விரும்பும் யாழ். வர்த்தகர்களுக்கு...
முன்பள்ளி மாணவர்களது எண்ணக்கரு வளர்ச்சியை தடுக்கிறது -  வலிகாமம் கல்வி வலய முன்பள்ளி உதவிக் கல்விப் ...
தரம் ஐந்திற்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை – வடக்கில் 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்றுவதாக மாகாண க...