முன்பள்ளி மாணவர்களது எண்ணக்கரு வளர்ச்சியை தடுக்கிறது –  வலிகாமம் கல்வி வலய முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர்!

Thursday, October 27th, 2016

முன்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில மொழியில் கற்பிக்கின்றபோது அவர்களது எண்ணக்கரு வளர்ச்சிக்கு அது  முட்டுக்கட்டையாக அமைகின்றது. உளவியலும் அதை நிரூபித்துள்ளது. பெற்றோர்களின் அதீத ஆசை, பிள்ளகைளின் ஆளுமையைச் சிதைப்பதாக இருக்கக்கூடாது. இவ்வாறு வலிகாமம் கல்வி வலய, முன்பள்ளி உதவிக் கல்வி பணிப்பாளர் கிருபானந்தன் தெரிவித்துள்ளார். வலி.மேற்கு – சங்கானை பிரதேச செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர் முதியோர் தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, உதவிக் கல்விப் பணிப்பாளர் உரையாற்றினார்.

அவர் தெரிவித்ததாவது:

சிறுவர்கள் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கு முதியவர்களின் அறிவுரைகள் அவசியம். இப்போது அநேகமான வீடுகளில் இந்த முதியவர்களைக் காணமுடிவதில்லை. அர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிடுகின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். முதியவர்களாகிய விருட்சங்களில் விழுதுகளாகிச் சமூகத்தில் வேரூன்றிக்க கொண்டிருப்பவர்கள் சிறுவர்கள். இவர்கள் சமூகத்திலிருந்து  பல விடயங்களை உள்வாங்குபவர்கள். 5 வயதுக்குள்ளே இவர்கள் அனைத்து விடயங்களையும் கிரகித்துக் கொள்கின்றனர். ஆற்றலைப் பெற்றுவிடுகின்றனர். 1ஆம் தரம் தொடக்கம் 9ஆம் தரம் வரை இவர்கள் எதனை வளர்க்கிறார்கள் என்று தெரியாது. 16 வயதில்தான் அது தெரியும். ஆங்கில மோகம் இன்று தலைவிரித்து ஆடுகின்றது. ஆங்கிலம் பேசுபவர்கள்தான் பெரியவர்கள் என்றும், பலர் நினைக்கின்றனர். இதனால் அநேகமான பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு முன்பள்ளியிலேயே ஆங்கிலம் கற்பிக்கின்றனர். ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் தாய்மொழியிலேயே பிள்ளைகளுக்கு ஆரம்பக் கல்வியைப் போதிக்கின்றன. பெற்றோர்களின் அதீத ஆசை பிள்ளைகளின் ஆளுமையைச் சிதைப்பதாக இருக்கக்கூடாது. ஆதலால் பிள்ளைகளுக்கு எது தேவையோ- அதனை உணர்ந்து கற்பிக்க வேண்டும். அவர்களைத் தண்டிக்காது அன்பாலே கற்பிக்க வேண்டும் – என்றார்.

IMG_6543-1024x768

Related posts: