வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

Friday, August 2nd, 2019

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை காரணமாக மீனவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் எதிர்வரும் சில தினங்களில் காற்றின் வேகம் அடிக்கடி 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும் என்றும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் கடல் அடிக்கடி கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், புத்தளத்தில் இருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையிலான கடல் பிரதேசம் மற்றும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் அடிக்கடி 55 கிலோமீற்றர் தொடக்கம் 65 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும் என்றும், குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் அடிக்கடி கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் , இடியுடன் கூடிய மழை பெய்யும்பொழுது கடும் காற்று வீசக்கூடிய சந்தர்ப்பங்களில் இந்த கடல் பிரதேசம் தற்காலிகமாக கொந்தளிப்புடன் காணப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடல் தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை குறைப்பதற்காக அவர்களைத் தெளிவுபடுத்தும் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு கடற்தொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலீப்வெத ஆராய்ச்சி கடற்தொழில் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த காலநிலை தொடர்பாக கடற்தொழில் திணைக்களம் வழங்கும் ஆலோசனைக்கு அமைய செயற்படுமாறும் அவர் மீனவர்களிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் சில தினங்களில் தொடர்ந்தும் இவ்வாறான கால நிலை நிலவக்கூடும் என்பதால் அவதானத்துடன் செயற்படுமாறு அனைத்து கடல் தொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோரிடம் கடற்தொழில் திணைக்களத்தின் தேடுதல் நடவடிக்கை பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்புக்கு அமையவே கடற்தொழில் திணைக்களத்தின் தேடுதல் நடவடிக்கை பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: