ரோன் கமராக்கள் பதிவு தொடர்பில் குழப்பம்!

Friday, May 31st, 2019

ட்ரோன் கமராக்களை பதிவு செய்வது தொடர்பில் பொலிஸாருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வராதமையால், யாழ்ப்பாணத்தில் ஒளிப்படத் துறைக்காக ட்ரோன் கமரா பயன்படுத்துபவர்கள் மத்தியில் குழப்பமான நிலைமை காணப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களை அடுத்து ட்ரோன் கமராக்களை பயன்படுத்துவது தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நிலையில் ட்ரோன் கமராக்களை வைத்திருப்போர் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு இராணுவத்தினர் கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியது.

அதனை அடுத்து ட்ரோன் கமராக்களை வைத்திருப்போர் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று கமராக்களை பதிவு செய்ய முயன்ற போது, தமக்கு அது தொடர்பில் எந்த விதமான அறிவித்தலும் கிடைக்கப் பெறவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன்போது கமரா உரிமையாளர்கள் தமக்கு கிடைத்த செய்தி ஒன்றினை காட்டி இராணுவத்தினர் கோரியுள்ளனர் என எடுத்துக் கூறிய பின்னர் சில பொலிஸ் நிலையங்களில் பதிவுகள் எதனையும் மேற்கொள்ளாது உரிமையாளர்களை பொலிஸார் திருப்பி அனுப்பியுள்ளனர்.

யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில், தமக்கு ட்ரோன் கமராக்களை பதிவு செய்யுமாறு எந்த விதமான அறிவித்தலும் வரவில்லை. அதனால் ட்ரோன் கமராக்களை பதிவு செய்ய வரும் உரிமையாளர்களின் பெயர் விபரம், மற்றும் கமராவின் விபரம் என்பவற்றைப் பதிவு செய்கிறோம் என கூறி, அதனை வெற்றுத்தாளில் பதிவு செய்தனர். கமராவை பதிவு செய்தமைக்குரிய எந்த ஆவணமும் கமரா உரிமையாளர்களிடம் பொலிஸார் கையளிக்கவில்லை.

ட்ரோன் கமராக்கள் பதிவு தொடர்பில் பொலிஸாருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வராதமையால் பொலிஸார் பதிவுகளை மேற்கொள்ளத் தயக்கம் காட்டுகிறார்கள். அதனால் கமரா உரிமையாளர்கள் மத்தியிலும் குழப்பம் காணப்படுகின்றது. எனவே உரிய தரப்பினர் உரிய தகவல்களை வழங்க வேண்டும் என ட்ரோன் கமரா உரிமையாளர்கள் கோரியுள்ளனர்.

Related posts: