ராஜீவ் காந்தி கொலை விவகாரம் – விடுதலையான சாந்தன் சுகயீனம் காரணமாக இன்று அதிகாலை காலமானார்!

Wednesday, February 28th, 2024

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், இந்திய அரசால் விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் என்கிற சுதேந்திரராஜா உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், அவர் இன்று (28) காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்பதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சாந்தன் இலங்கை தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டார்.

இந்நிலையில் தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனக் சாந்தன் கோரிக்கைவிடுத்திருந்தார்.

அத்துடன் அவரின் தாய் மற்றும் சகோதர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கடந்த 30.01.2024 ஆம் திகதியன்று சந்தித்து, சாந்தன் நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில்சாந்தன் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்திருந்தார்.

அத்துடன் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரின் கவனத்துக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொண்டுவந்திருந்தார்.

இதையடுத்து இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தனை அவரது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் வெளியிட்டுடிருந்தார்.

இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்துவந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள சாந்தன் எனப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராசா மீண்டும் நாடு திரும்புவதற்கு எந்தவித தடையும் இல்லையென இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி வந்தார் சாந்தன். சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்க இந்திய மத்திய அரசும் அனுமதி வழங்கியது.

ஆனால், சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

கோமா நிலைக்கு சென்ற சாந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சாந்தன் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: