25 ஆம் திகதிமுதல் இரண்டு வாரங்களை நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரடனம் – யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் அறிவிப்பு!

Wednesday, September 20th, 2023

எதிர்வரும் 25 ஆம் திகதிமுதல் இரண்டு வாரங்களை நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக பிரடனப்படுத்தியுள்தாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தில் தற்போது டெங்கு நோய் பூரண கட்டுப்பாட்டில் இருக்கின்றது, ஆனால் தற்போது ஆரம்பித்திருக்கின்ற வடக்குக் கிழக்கு பருவப்பேச்சு மழைக்குப் பின்னர் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக யாழ்ப்பாண மாவட்டத்தில் வடகீழ் பரவப்பேச்சு மழை ஆரம்பித்த பின்னர் ஒக்டோபர், நவம்பர் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய ஐந்து மாதங்களில் பொதுவாக டெங்கு நோயின் பரவல் அதிகமாக இருக்கும்.

இந்த வருடத்தைப் பொறுத்தவரையில் இன்று வரையில் யாழ் மாவட்டத்தில் 1836 நோயாளர்கள் டெங்கு நோயுடன் இனங்காணப்பட்டு இருக்கின்றார்கள். இதில் ஒரு இறப்பும் ஏற்பட்டிருக்கின்றது, இந்த வருடத்தில் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய நான்கு மாதங்களில் அதிகமான நோயாளர்கள் இனங்காணப்பட்டு இருந்தார்கள். பின்னர் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில்  ஏறத்தாழ 120, 130 நோயாளர்கள் தான் இனங்காணப்பட்டு இருக்கின்றார்கள். தற்போதைய சூழ்நிலையில் இந்த நோய் இங்கு கட்டுப்பாட்டில் இருக்கின்றது

கடந்த வருடம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3460 நோயாளர்கள் இனங்காணப்பட்டதுடன் 10 இறப்புகளும் இடம்பெற்றிருந்தன, எனவே கடந்த வருடத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் குறைவாகவே காணப்படுகிறது.

எனவே இந்த வடக்கு கிழக்கு பருவ மழை ஆரம்பித்து இருக்கின்ற காரணத்தினால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் காலங்களில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதிமுதல் இரண்டு வாரங்களை நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக பிரடனப்படுத்தி இருக்கின்றோம்.

அதனை ஒருங்கிணைக்கின்ற வகையிலே மாவட்ட மட்டத்தில் கடந்த 15 ஆம் திகதி யாழ் மாவட்டம் மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் டெங்கு தடுப்பு செயலணி கூட்டம் இடம்பெற்று இருந்தது, இந்தக் கூட்டத்தின் போதே இந்த இரண்டு வாரங்களையும் டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனப்படுத்துவது என தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்த வாரத்தில் பிரதேச மட்ட டெங்கு தடுப்பு செயலணி கூட்டங்கள் பிரதேச செயலாளர்கள் தலைமையில் இடம்பெறும். இந்தக் கூட்டத்தின் போது ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் எவ்வாறு இந்த டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது பற்றி தீர்மானிக்கப்படும். இதற்கு அடுத்த கட்டமாக இந்த வாரத்திலே கிராமிய மட்ட  டெங்கு தடுப்பு செயலணி கூட்டங்கள் இடம் பெற்று கிராம மட்டத்தில் எவ்வாறு இதனை கட்டுப்படுத்துவது என்பது பற்றி தீர்மானிக்கப்படும்.

இந்த இரண்டு வாரத்திலும் பொதுமக்கள் இந்த நுளம்பு உற்பத்தியாகின்ற இடங்களை சிரமதானத்தின் மூலம் சுத்திகரிக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: