தாம் நினைத்ததே சரியென வாதிடும் மாணவர்கள் மீது பெற்றோரே அக்கறை கொள்ளுங்கள் – உளநல மருத்துவர் சுதாகரன் அறிவுறுத்துகிறார்!

Monday, November 20th, 2017

பொதுவாக கட்டிளமைப் பருவக் காலத்தில் மாணவர்கள் தாம் சொல்வதே சரியென்று வாதிடுவர். ஆனால் அவர்களின் நலன்களில் பெற்றோர்கள் எப்போதும் அக்கறை செலுத்த வேண்டும்.

இவ்வாறு உளநல மருத்துவர் சி.சுதாகரன் தெரிவித்தார்:

தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த வெற்றியாளர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு வவுனியா தமிழ் மகாவித்தியாலய ஐயாத்துரை மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

கட்டிளமைப்பருவத்தினர் பொதுவாக தாம் நினைத்ததையே செய்வர். தமக்கு பிடித்த நண்பர்களுடன் தான் பழகுவர். ஆனால் தனது பிள்ளையின் நண்பர்கள் யார் என்று பெற்றோர்கள் அறிய வேண்டும். நல்ல நண்பர்களுடன் அவர்கள் பழகுவதற்கு இடமளிக்க வேண்டும். தீய குணமுடைய நண்பர்களுடன் சேரும்போது அவர்கள் திPய பழக்கவழக்கங்களையே பழக வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும்.

இதனாலேதான் பல்வேறு சமூக சீரழிவுகள் இடம்பெறுகின்றன. இந்தப் பருவத்தில் பிள்ளைகளுடன் பெற்றோர் நன்றாகக் கதைக்க வேண்டும். ஒழுக்கங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். சிறிய வயதிலேயே கற்றல் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். தொடர் முயற்சிதான் வெற்றிக்கு வழி வகுக்கும். புலமைப் பரிசில் பரீட்சையால் பிள்ளைகள் கவலை அடைய நேரிடலாம். ஆனால் அவர்களின் அறிவு விருத்தியடையும்.

இப்படியான நிகழ்வுகளை நாம் நடத்துவதன் மூலமாக மாணவர்கள் மேலும் உற்சாகத்துடன் மேலும் கற்றலில் ஈடுபடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பொதுவாக பரீட்சையின் பின்பு சில பெற்றோர்கள் அல்லது மாணவர்கள் உள திருப்தியைப் பெறுவதற்காக எம்மிடம் வருவதுண்டு. இந்த வருடம் அவ்வாறு எவரும் வரவில்லை. இது நல்ல மாற்றத்தைக் காட்டுகிறது – என்றார்.

Related posts: