யாழ்.குடாநாட்டைத் தாக்குமா கஜா?  – குழப்பத்தில் மக்கள்!

Thursday, November 15th, 2018

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள கஜா சூறாவளி மேலும் வலுவடைந்து இன்று இலங்கைக்கு வடகிழக்காக காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கே சுமார் 590 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்வதுடன் பலமான சூறாவளியாக விருத்தியடையும் சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலையப் பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

இத்தொகுதி நவம்பர் 15ஆம் திகதி மதியத்திற்கு முன்னதாக தென் தமிழ்நாடு கரையைக் கடப்பதுடன் இலங்கையின் வடக்கு கரைக்கு நெருக்கமாகவும் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நிலப்பகுதிகளுக்கு இத்தொகுதியின் தாக்கம் காரணமாக வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் நவம்பர் 14ஆம் திகதி மாலையிலிருந்து 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காற்றுடன் கூடிய மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, மாலையிலிருந்து யாழ்.குடாநாட்டில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

மன்னார், புத்தளம், திருகோணமலை, அனுராதபுரம், பொலன்னறுவை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்றும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. யாழ். குடாநாட்டில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வட மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கடற்பரப்புகளுக்கு முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் நவம்பர் 14ஆம் திகதி மதியத்திலிருந்து நவம்பர் 16ஆம் திகதி வரை காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 110 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

எதிர்பார்க்கப்படும் சேதங்கள்

கிடுகால் வேயப்பட்ட கொட்டில்கள்ஃவீடுகள், கூரைகள் காற்றில் பறக்கலாம், மேலும் முறையாக பொருத்தப்படாத தகடுகள் காற்றில் பறக்கலாம்.மின்சார மற்றும் தொலைத்தொடர்பு கம்பிகளுக்கு ஏற்படக்கூடிய சேதங்கள்

மரக்கிளைகள் முறிந்து வீழ்தல் மற்றும் மரங்கள் வேருடன் சாய்தல்நெல் வயல்கள், வாழைத்தோட்டம், மற்றும் பப்பாளி மரங்களுக்கும் சேதங்கள் கரையோரத்தை அண்டிய தாழ்வான பிரதேசங்களில் கடல் நீர் உட்புகுதல்

எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மீனவர்கள் பொத்துவிலிலிருந்து திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

தென்மேற்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடலில் தங்கியிருக்கும் மீனவர்கள் பாதுகாப்பான கடற்பரப்புகளுக்கு நகருமாறு ஆலோசனை வழங்கப்படுகின்றது.

வட கரையோரத்தில் குடிசைகளில் வாழ்வோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு ஆலோசனை வழங்கப்படுகின்றது. ஏனையோர் வீடுகளிலேயே தங்கியிருக்கவும்.

விழக்கூடிய மரங்கள், மின்கம்பிகள் குறித்து அவதானமாக இருக்கவும்.

இடி முழக்கத்தின் போது கம்பித்தொடர்புள்ள தொலைபேசி மற்றும் மின்னிணைப்பிலுள்ள மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts: