ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் – அமைச்சர் தினேஷ் குணவர்தன வலியுறுத்து!

Sunday, June 5th, 2022

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன இரு நாடுகளுக்கும் இடையில் பாரிய பொருளாதார பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கெஸ்பேவ – கொரகப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

Aeroflot விமானம் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில், ரஷ்யா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் ஜனிதா லியனகே, ரஷ்ய வெளிவிவகார அமைச்சுக்கு வரவழைக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் Sputnik செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ரஷ்ய Aeroflot விமான நிறுவனம் கொழும்பிற்கான தனது வணிக விமானங்களை நிறுத்தியுள்ளது.

இலங்கையில் தனது விமானங்கள் தடையின்றி பறப்பதை உறுதி செய்ய முடியவில்லை என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்பை நோக்கி பயணிக்கும் விமானங்களுக்கான விமானச் சீட்டு விற்பனை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக Aeroflot நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, Aeroflot விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைக்கும் அரசாங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என விமான நிலையமும் விமான சேவை நிறுவனமும் அறிக்கை வெளியிட்டுள்ளன.

Aeroflot விமான சேவை நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட Celestial Aviation Trading நிறுவனத்திற்கு இடையே வணிகப் பரிவர்த்தனை தொடர்பாக ஏற்பட்ட தகராறே இதற்கு காரணம் என அதில் கூறப்பட்டுள்ளது.

ரஷ்ய விமானம் ஒன்றுக்கு சொந்தமான MSN 1301 என்ற விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட விடாது கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் அண்மையில் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Celestial Aviation Trading நிறுவனம் செய்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவ்வாறானதொரு தடை உத்தரவு அல்லது இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்..

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட தடை விதிக்கப்பட்டுள்ளதால், 191 பயணிகளும் 13 பணியாளர்களும் ஹோட்டல்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: