யூரியா உர மூடை மோசடி: – விசாரணை அதிகாரிகள் பயன்படுத்திய தராசு தரமற்றது என விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Sunday, November 20th, 2022

அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கு பகிரப்படும் யூரியா அடங்கிய உர மூடை உரிய நிறையுடன் இல்லை என்பது தெரியவந்த சந்தர்ப்பத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட நுகர்வோர் அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் பயன்படுத்திய தராசு தரமற்றது என்பது கண்டறியப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக உர மூடைகளை கொண்டு சென்ற பாரவூர்தி ஒன்றில் இருந்த 500 உர மூடைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது, குறித்த உர மூடைகள் உரிய நிறையுடன் இல்லை என்பது தெரியவந்தது. 50 கிலோகிராம் நிறை கொண்டிருக்க வேண்டிய குறித்த உர மூடைகள் 47, 48 மற்றும் 49 கிலோகிராம் நிறையுடன் காணப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபை குறிப்பிட்டது.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட கொமர்ஷல் நிறுவனத்தின் விசாரணைக் குழுவின் அறிக்கையில் பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்ட தராசு தரமற்றது என்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது என விவசாய அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: