இலங்கையில் கொரோவை விட மற்றுமொரு ஆபத்தான உயிர்கொல்லி நோய் : இதுவரை 37 பேர் பலி – தொற்று நோய் பிரிவின் வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிக்கை!

Monday, August 24th, 2020

இலங்கையில் எலிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாக தொற்று நோய் பிரிவு எச்சரித்துள்ளது. அதனடிப்படையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 4554 பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

குறித்த காலப்பகுதியில் 37 பேர் எலிக்காய்ச்சலினால் உயிரிழந்துள்ளதாக தொற்று நோய் பிரிவின் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதே நேரம் இலங்கையில் அதிகமாக எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இரத்தினபுரி மாவட்டம் பதிவாகியுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1146 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மொனராகலை மாவட்டத்தில் மாத்திரம் இதுவரை எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தும் கொனோரா வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் இந்த வருடத்தில் எலிக்காய்ச்சலினால் 37 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: