யாழ் மாவட்டத்தில் தொடர்ந்தும் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் அதிகரிப்பு – பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என மாவட்ட செயலணி வலியுறுத்து!

Saturday, June 12th, 2021

தொடர்ந்தும் யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் நிலைமை அதிகரித்த நிலையிலேயே காணப்படுவதாக தெரிவித்துள்ள யாழ் மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி பயணத் தடையை சுயபாதுகாப்புக்கானதாக கருதவேண்டும் என்பதுடன் பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

யாழ் மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்த இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள குறித்த செயலணி – மேலும் குறிப்பிடுகையில் –

நேற்றையதினம் கிடைக்கப்பெற்ற பிசிஆர் பரிசோதனை முடிவின்படி 139 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் இன்று காலை கிடைத்த பி சி ஆர் மற்றும் அன்ரிஜன்  பரிசோதனையில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 4 ஆயித்து 122 ஆக அதிகரித்துள்ளதோடு இதுவரை 53 இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் யாழ் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 5 கிராம அலுவலர் பிரிவுகளுள் மூன்று கிராமங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. நல்லூர் மற்றும் உடுவில் பிரதேச பிரிவுகளில் இருகிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும்  தனிமைப்படுத்தப்பட்டு காணப்படுகின்றது. அத்துடன் யாழ் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 42 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 712 நபர்கள் தற்போது சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா உணவு பொதிகள் இந்த வருடம் 7 ஆயிரத்து 588 குடும்பங்களுக்கும்  கடந்த வருடம் 3 ஆயிரத்து 526 பேருக்கு மாக மொத்தமாக 11 ஆயிரத்து 114 பேருக்கு 111 மில்லியன் பெறுமதியான உணவுப்பொதி  வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே 5 ஆயிரம் ரூபா விசேட கொடுப்பனவு தற்பொழுதுவரை 65 ஆயிரத்து 120 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மாற்றுத் திறனாளிகள் வயது முதிர்ந்தவர்கள் சிறுநீர் பாதிப்பு உள்ளவர்களுக்கு அடுத்த கட்டமாக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதுடன் வருமானம் குறைந் குடும்பங்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அதேநேரம் யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய பொது மக்களுடைய  தேவைகளை பூர்த்தி செய்ய வீடுவீடாகச் சென்று விற்பனை செய்வதற்குரிய அனுமதியினை வழங்கப்பட்டுள்ளது.

விலை அதிகரித்தல் தரமற்ற பொருள் விற்பனை தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள் களப் பரிசோதனை செய்து வருவதுடன் சட்டமீறலுக்கு உட்பட்ட வியாபாரிகள் பலர் எச்சரிக்கை செய்யப்படுவதோடு சிலருக்கு சட்ட நடவடிக்கையும்  எடுக்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ள யாழ் மாவட்ட கொரோனா செயலணி விவசாயிகள் தமது விளைபொருட்களை விற்பனை செய்வதில் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குரிய தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளதுடன் உள்ளூரிலும் அதனைக் கொள்வனவு செய்யக்கூடிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே பொதுமக்கள் அநாவசியமான பயணங்களை தவிர்த்து வீடுகளில் இருந்தவாறு தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: