யாழ் மாநகர பகுதிக் கடலோரங்களை சுற்றுலா தளமாக உருவாக்கும்போது சுற்றுச் சூழல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் – மாநகர உறுப்பினர் V.K. ஜெகன் வலியுறுத்து!

Sunday, June 24th, 2018

யாழ் நகரின் கடற்கரையோரங்களை அழகுபடுத்தி உல்லாச பயணிகளின் தளமாக உருவாக்கும்போது சுற்றுச் சூழல் விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்படுவதுடன் அவற்றை தனியாருக்கு வழங்குவதனூடாக அறவிடப்படும் வரிகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாக செயலாளரும் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் ஆர்னோல் தலைமையில் நடைபெற்ற யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வின்போது  சபையின் ஆளுகைக்குள் இருக்கும் கடற்கரையோரங்களின் அபிவிருத்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

மாநகரசபையால் இவ்வாண்டு முன்னெடுக்கப்படவுள்ள யாழ் மாநகரை அழகுபடுத்தல் திட்டத்தின் கீழ் கடற்கரையோர அபிவிருத்தி மற்றும் உல்லாச பயணிகளை கவரும் வகையிலான செயற்றிட்டங்கள் பல முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த நடவடிக்கைகளின்போது எமது பிரதேசத்தின் கலாசாரங்கள் சீரழியாதவண்ணம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன் சுற்றுச் சூழல் பாதிக்காதவகையிலும்  கடற்பரப்புகளில் கடற்றொழில் மேற்கொள்ளும் தொழிலாளர்களது தொழில் பாதிக்கப்படாத வகையில் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

மேலும் கடற்கரை அபிவிருத்தி முயற்சிகளின்போது கடற்கரை பிரதேசங்களை உல்லாச தளங்களாக பயன்படுத்தும்போது தனியார் குத்தகை அடிப்படையில் குறித்த பகுதியின் இடங்களைப் பெற்றுக்கொள்ள முன்வருவார்கள். இந்த நடவடிக்கைகளின்போது மாநகரின் வருவாய் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன் அது தொடர்பில் நேர்மையான முறையில் வரி அறவீடுகள் மேற்கொள்ளப்பட்டு  மாநகரின் வளர்ச்சியை உறுதிசெய்ய வேண்டும்.

இதனூடாகவே யாழ்.மாநகரின் அபிவிருத்தியையும் அதன் சுற்றுச் சூழலையும் நாம் பாதுகாத்து அழகான நகரமாக உருவாக்கிக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: