யாழ் மாநகர சபை: 28  இலட்சம் ரூபா மோசடி தொடர்பான திணைக்கள ரீதியான விசாரணை நிறைவு!

Tuesday, November 7th, 2017

யாழ்ப்பாணம் மாநகரசபையில் பணியாற்றிய ஓர் ஊழியரினால் மேற்கொள்ளப்பட்டதான 28 இலட்சம் ரூபா மோசடி தொடர்பில் திணைக்களம் சார்ந்து இடம்பெற்ற விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மாநகரசபையின் கட்டட அனுமதிப் பகுதியில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் நிதி மோசடியில் ஈடுட்டிருந்தமை கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் கண்டு பிடிக்கப்பட்டது. மோசடியில் ஈடுபட்ட ஊழியரை இடைநிறுத்தம் செய்து முதல் கட்ட விசாரணைகள் இடம்பெற்றன. விசாரணைகளில் குறித்த ஊழியரினால் மோசடி செய்த பணம் மொத்தமாக 28 லட்சம் ரூபா என உறுதி செய்யப்பட்டது.

மோசடி செய்யப்பட்ட தொகையை ஏற்றுக் கொண்ட ஊழியர் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபா மட்டுமே மீளச் செலுத்தியிருந்தார். மீதித் தொகையினை செலுத்துவதற்கு தனது பணியை மீள வழங்கும் பட்சத்தில் ஊதியத்திலிருந்து செலுத்துவதாக தெரிவித்திருந்த போதும் குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மாநகரசபையினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டது. குறித்த முறைப்பாட்டினை நீண்ட இடைவெளியின் பின்னர் பொலிஸார் நீதிமன்றில் வழக்காகத் தாக்கல் செய்தனர். இதே நேரம் திணைக்கள ரீதியிலான விசாரணைகளும் இடம்பெற்றன.

திணைக்கள ரீதியில் இடம்பெற்ற விசாரணைகளே தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளன. குறித்த விசாரணையானது மாவட்டச் செயலகத்தின் ஓய்வு பெற்ற கணக்காளர் தலைமையில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை மேலும் ஒரு வாரம் நீடிப்பு - கல்வி அமைச்சு...
பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் மடிக்கணனி - பட்டம் பெற்றும்வரை கடன் தொகையை செலுத்த தேவையில்லை - ப...
சவால்களை வெற்றிகொண்டு சுற்றுலா தொழிற்துறையின் புதிய பயணத்திற்கு தயாராகுங்கள் - ஜனாதிபதி வலியுறுத்து!