யாழ். மாநகரில் இன்றும் , நாளையும் டெங்கு ஒழிப்பு!

Thursday, December 27th, 2018

யாழ்ப்பாணம் மாநகரப் பிரதேசத்தில் டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இன்றும் நாளையும் இடம்பெறும் என்று மாநகர சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழையை அடுத்து டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இன்று வியாழக்கிழமை நாவாந்துறைப் பிரதேசத்தில் ஜே.86, ஜே.84, ஜே.83 ஆகிய கிராம அலுவலகர் பிரிவு மற்றும் யாழ்ப்பாண நகரை அண்டிய ஜே.76, ஜே.78 ஆகிய கிராம அலுவலகர் பிரிவுகளிலும் இந்த டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கை இடம்பெறும்.

நாளை வெள்ளிக்கிழமை நல்லூர் பிரதேசத்தில் ஜே.105, ஜே.108 ஆகிய கிராம அலுவலகர் பிரிவு, அரியாலையில் ஜே.92 கிராம அலுவலகர் பிரிவு, வண்ணார்பண்ணையில் ஜே.100, 101 ஆகிய கிராம அலுவலகர் பிரிவுகளிலும் டெங்குக் கட்டுப்பாட்டுச் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.

இந்த இருநாள்களும் டெங்கின் தாக்கம் காணப்படும் இடங்களில் உள்ள சகல குடியிருப்பாளர்களின் சுற்றாடல்களும் சோதனை செய்யப்படவுள்ளன.

இதேவேளை யாழ்ப்பாணம் மாநகரப் பிரதேசத்தில் இந்த மாதத்தில் நேற்று வரை 70 பேர் வரையில் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கின் தாக்கம் காணப்படும் இடங்களில் அதற்கான கட்டுப்பாட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக மாநகர சுகாதாரப்பிரிவு தெரிவித்தது.

Related posts: